தொடக்கநிலை ஸ்மார்ட்போனான 'யுவா 3 ப்ரோ'வை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லாவா
இந்தியாவில் தொடக்கநிலை ஸ்மார்ட்போன் பிரிவில் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது லாவா. 'யுவா 3 ப்ரோ' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனை, இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் யுவா 2 ப்ரோவின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியிட்டிருக்கிறது லாவா. என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது இந்த யுவா 3 ப்ரோ? 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் HD+ டிஸ்பிளே, பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி ஆகிய வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது. முக்கியமாக இந்த யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போனுடன், இலவச இணைப்பாக சார்ஜரையும் வழங்கியிருக்கிறது லாவா.
லாவா யுவா 3 ப்ரோ: ப்ராசஸர் மற்றும் விலை
யுனிசாக் T616 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் இந்த தொடக்கநிலை யுவா 3 ப்ரோ மாடலானது, 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் என ஒரே ஒரு வேரியன்டாக மட்டுமே வெளியாகியிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50MP முதன்மை கேமராவுடன் கூடிய டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. விளம்பரங்களில்லாத, பிளாட்வேர்கள் இல்லாத ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் கூடிய ஸ்மார்ட்போனாக இதனை வெளியிட்டிருக்கிறது லாவா. 4G, டூயல் சிம், ப்ளூடூத் 5.2 மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவை கனெக்டிவிட்டிக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இந்த தொடக்கநிலை யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.8,999 விலையில் வெளியிட்டிருக்கிறது லாவா நிறுவனம்.