சென்னை ஐஐடி மூளை ஆராய்ச்சி மையம்: பிரதமர் மோடி திறந்து வைத்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
மருத்துவ உலகிற்கு சவால் விடும் மனித மூளையின் மர்மங்களை அவிழ்க்கும் வகையில், சென்னை ஐஐடி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை' பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். இதுவரை வழக்கத்திலுள்ள MRI ஸ்கேன் முறையில் மூளையின் மேற்பரப்பு மற்றும் பொதுவான பாதிப்புகளை மட்டுமே துல்லியமாக அறிய முடிந்த சூழலில், தற்போது இந்த அதிநவீன மையத்தின் மூலம் செல்லுலார் அளவிலான பாதிப்புகளையும் துல்லியமாகப் படம்பிடித்து முப்பரிமாண வடிவில் (3D) வரைபடமாக்க முடியும் என்பது மருத்துவ அறிவியலின் மாபெரும் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அதிநவீன ஆய்வு
சிசு முதல் 90 வயது முதியவர் வரை முழு நரம்பியல் பகுப்பாய்வு
அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தானமாகப் பெறப்படும் கருவில் உள்ள சிசுவின் மூளை முதல் 90 வயது வரை வாழ்ந்த முதியவர்களின் மூளை வரை இங்கு முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
மூளையின் பாகங்களை மிக நுண்ணிய பகுதிகளாகப் பிரித்து, செல்கள், நரம்பு இழைகள் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
மேலும் 'ANCHOR' திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட மூளைத்தண்டு உட்கருக்கள் கொண்ட முப்பரிமாண வரைபடங்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன; இவை நரம்பியல் ஆய்வாளர்களுக்கு உலகளவில் பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் கம்ப்யூட்டர் சாதனை
பக்கவாதத்திற்கு எதிரான 'சி-ஸ்ட்ரோக்' வரைபடம்
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை செல்களைத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டும் உலகின் முதல் டிஜிட்டல் வரைபடமான 'C-STROKE' வரைபடத்தை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
சென்னை ஐஐடியின் அதிநவீன 'பரம்சக்தி' சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் இந்த பிரம்மாண்ட 3D மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மூளையின் நரம்பு அழற்சி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் பக்கவாதம் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்குப் புதிய மருந்துகளைத் தயாரிக்க முடியும் என்று இம்மையத்தின் தலைவர் மோகனசங்கர் சிவபிரகாசம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.