GTA 6 கேம் விளையாட $1,00,000 சம்பளம், 100 இன்ச் டிவி இலவசம்: கல்ஷி நிறுவனம் அதிரடி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் பிரபல முன்னறிவிப்பு சந்தை நிறுவனமான கல்ஷி (Kalshi), கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 (GTA 6) விளையாட்டை ஆய்வு செய்வதற்காக 'GTA 6 ஆராய்ச்சியாளர்' என்ற புதிய பணியிடத்தை அறிவித்துள்ளது. இந்த பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு $1,00,000 முதல் $1,20,000 வரை ஊதியமும், கூடுதலாக $15,000 நிறைவு போனஸும் வழங்கப்படும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் கொண்ட கேமர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாராந்திர அறிக்கைகள்
நவம்பர் 19 நள்ளிரவு முதல் தினமும் 10 மணி நேர நேரலை மற்றும் வாராந்திர அறிக்கைகள்
ரொக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் GTA 6 விளையாட்டு வரும் நவம்பர் 19 வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.
கேம் வெளியாகும் நள்ளிரவு முதலே யூடியூப் அல்லது ட்விட்ச் தளத்தில் முழு விளையாட்டையும் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக நேரலை செய்ய வேண்டும்.
மேலும் விளையாட்டில் உள்ள லியோனிடா (Leonida) எகானமி, பணம் சம்பாதிக்கும் உத்திகள் மற்றும் கேம் வெளியீட்டால் நிஜ உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வாராந்திர அறிக்கைகளை தயாரிக்க வேண்டும்.
சலுகைகள்
100 இன்ச் தொலைக்காட்சி, PS5 கன்சோல் மற்றும் தினமும் $75 உணவுப் படி சலுகைகள்
கவர்ச்சிகரமான ஊதியத்துடன் கூடுதலாக பல ஆடம்பர சலுகைகளையும் கல்ஷி நிறுவனம் இந்த பணியிடத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு 100 இன்ச் பிரம்மாண்ட தொலைக்காட்சி மற்றும் பிளேஸ்டேஷன் 5 அல்லது எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோல் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இது தவிர தினமும் $75 வரை டோர்டாஷ் (DoorDash) உணவு டெலிவரி சலுகையும், உடல்நலனை பேணுவதற்காக ஜிம் உறுப்பினர் வசதியும் நிறுவனத்தால் வழங்கப்படும்.
அறிவிப்பை நீக்கிய லிங்க்ட்இன்
வேலைவாய்ப்பு அறிவிப்பை நீக்கிய லிங்க்ட்இன் மற்றும் கல்ஷி நிறுவனத்தின் பதிலடி
நவம்பர் 13 ஆம் தேதி இந்த வேலைவாய்ப்புப் பதிவை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு லிங்க்ட்இன் (LinkedIn) தளம் நீக்கியது.
இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்த கல்ஷி நிறுவனம், இது ஆன்லைன் கேமர்களுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு எனக் கண்டனம் தெரிவித்ததோடு, எக்ஸ் வேலைவாய்ப்புத் தளத்தை விரைவில் கொண்டு வருமாறு எலான் மஸ்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
லிங்க்ட்இன் நீக்கினாலும் கல்ஷியின் சொந்த இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.