உலகின் அதிக வெப்பமான நாளாக பதிவு செய்யப்பட்ட ஜூலை 3
உலகளவில் அதிக வெப்பமான நாளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஜூலை 3. தங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் ஜூலை 3-ஐ மிகவும் வெப்பமான நாள் எனக் குறிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் National Centers of Environmental Prediction. கடந்த ஜூலை 3-ம் நாள் உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர், உலகின் சராசரி வெப்பநிலையாக 2016 ஆகஸ்டில் பதிவுசெய்யப்பட்ட 16.92 டிகிரி செல்சியஸே, அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியிருந்தது. "இந்த புதிய மைல்கல் நாம் கொண்டாட வேண்டியது அல்ல, இது உலக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஓர் எச்சரிக்கை", எனத் தெரிவித்திருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த காலநிலை ஆய்வாளர் ஃப்ரெட்ரிக் ஓட்டோ.
தொடர்ந்து அதிகரிக்கவிருக்கும் வெப்பம்:
கடந்த சில வாரங்களாக தெற்கு அமெரிக்கா அதிகளவிலான வெப்பத்தை எதிர்கொண்டு வருகிறது. சீனாவும், தொடர்ந்து 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தகித்து வருகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் 50 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது குளிர்காலத்தைச் சந்தித்து வரும் அன்டார்டிகாவில் கூட, வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை சற்று அதிகமாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களும், அதிகரித்து வரும் எல் நினோ மாற்றங்களும் இந்த வெப்பமயமாதலுக்குக் காரணம் எனத் தெரிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். "இது இத்தோடு முடியும் விஷயம் அல்ல. அதிகரித்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீடு தற்போதைய நிலையை இன்னும் மோசமாக்கவே இருக்கின்றன. இந்த வருடத்தில் இன்னும் பல வெப்பமான நாட்களை நாம் பார்க்கவிருக்கிறோம்." எனத் தெரிவித்திருக்கிறார் ஆராய்ச்சியாளர் ஒருவர்.