Page Loader
ஜூலை 2023-ஐ வெப்பமான மாதமாக அறிவித்து, எச்சரிக்கை விடுத்திருக்கும் நாசா
ஜூலை 2023-ஐ வெப்பமான மாதமாக அறிவித்து, எச்சரிக்கை விடுத்திருக்கும் நாசா

ஜூலை 2023-ஐ வெப்பமான மாதமாக அறிவித்து, எச்சரிக்கை விடுத்திருக்கும் நாசா

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 15, 2023
11:47 am

செய்தி முன்னோட்டம்

பூமியில் 1880-ல் இருந்து, ஜூலை மாதத்தில் பதிவான வெப்ப அளவுகளின் தரவுகளை வைத்து, கடந்த ஜூலை 2023-யே அதிக வெப்பமான ஜூலை மாதமாக அறிவித்திருக்கிறது நாசா. முந்தைய ஆண்டுகளின் ஜூலை மாதங்களை விட கடந்த ஜூலை மாதமானது 0.24 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பத்தைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம். 1951-1980களின் ஜூலை மாதங்களில் பதிவான சராசரி வெப்பநிலையை விட, கடந்த 2023 ஜூலையில் 1.18 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இந்த வெப்ப நிலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக, மனிதர்களால் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களையே கைகாட்டுகிறது நாசா.

நாசா

உயரும் வெப்பநிலை: 

தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா மற்றும் அன்டார்டிக் தீபகற்பம் ஆகிய பகுதிகளில் சராசரி வெப்பநிலையை விட கடந்த ஜூலையில் 4 டிகிரி வரை அதிக வெப்பம் பதிவாகியிருக்கிறது. உயரும் கடல் மட்ட வெப்பநிலையும், ஜூலை மாதம் வெப்பநிலை உயர்ந்ததற்கான காரணம் எனத் தெரிவித்துள்ளது நாசா. கிழக்கு பசிபிக் வெப்பமண்டல் கடல் மேற்பரப்பில் உயர்ந்த வெப்பநிலை தான், கடந்த மே மாதம் எல்நினோ உருவாகக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்த எல்நினோவின் தாக்கத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் நாம் சந்திப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நமக்கே நமக்காக இருக்கும் பூமியைக் காப்பாற்ற இப்போதே நாம் செயல்பட வேண்டியது அவசியம்", எனத் தெரிவித்திருக்கிறார் நாசாவைச் சேர்ந்த பில் நெல்சன்.