இந்தியாவில் ரூ.999 விலையில் வெளியானது ஜியோவின் புதிய 'ஜியோ பாரத் போன்'
இந்தியாவில் புதிதாக 'ஜியோ பாரத் போன்' என்ற ஃப்யூச்சர் போனை அறிமுகம் செய்திருக்கிறது ஜியோ. ரூ.999 ரூபாயில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஃப்யூச்சர் போனானது, ஜியோவின் '2G இல்லா இந்தியா' முன்னெடுப்பை சாத்தியப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 4G சேவைகளை அறிமுகப்படுத்திய போது, விரைவில் அனைத்து மக்களும் 4G சேவையை பெற வழிவகை செய்வோம் எனப் பேசியிருந்தார் முகேஷ் அம்பானி. அதனை செயல்படுத்துவதற்காகவே இந்த போனும் வெளியாகியிருக்கிறது. கார்பன் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த புதிய ஃப்யூச்சர் போனை வெளியிட்டிருக்கிறது ஜியோ. இதன் மூலம், ஜியோ நிறுவனம் வழங்கும் மலிவு விலை இணைய வசதியை இந்தியாவின் அனைத்து மூலையில் இருக்கும் பயனர்களும் பயன்படுத்த முடியும்.
என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது புதிய 'ஜியோ பாரத் போன்':
4G இணைய வசதியுடன் வெளியாகியிருக்கும் இந்த புதிய ஜியோ போனில், ஜியோ சினிமா, ஜியோ சாவன் மற்றும் ஜியோபே ஆகிய வசதிகளை இன்-பில்ட்டாகவே கொடுத்திருக்கிறது ஜியோ. இதன் மூலம், UPI பரிவர்த்தனைகளையும் மக்களால் மேற்கொள்ள முடியும். ஜியோவின் மியூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் OTT சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஃப்யூச்சர் போனுக்காகவே, புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. ரூ.123 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டத்தில், 28 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 0.5GB டேட்டா ஆகிய வசதிகள் அளிக்கப்படுகின்றன.