செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ
உலகளவில் பல்வேறு நாடுகளில் செயற்கைகோள் வழி இணைய சேவையை தன்னுடைய ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் எலான் மஸ்க் வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் முதன் முறையாக செயற்கைகோள் வழி இணைய சேவையை வழங்கவிருக்கிறது ஜியோ நிறுவனம். ஏற்கனவே ஜியோஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் வசதிகள் மூலம் இந்தியா முழுவதும் பெரும்பாலான இடங்களுக்கு இணைய சேவை வழங்கி வருகிறது ஜியோ. தற்போது செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபர்' (JioSpaceFiber) அறிமுகப்படுத்துவதன் மூலம், இணைய சேவை வழங்குவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முடியாத கடைக்கோடி கிராமங்களுக்கும், அதிவேக இணைய வசதியை வழங்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறது ஜியோ.
இந்திய மொபைல் காங்கிரஸில் அறிமுகமான ஜியோ ஸ்பேஸ்ஃபைபர்:
இந்த புதிய செயற்கைகோள் வழி இணைய சேவை திட்டத்தை இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜியோ. இந்தியாவில் ஜியோ நிறுவனம் இந்த வகையில் இணைய சேவையை வழங்குவதற்குத் தேவையான செயற்கைகோள் கட்டமைப்பை லங்ஸம்பர்கைச் சேர்ந்த SES என்ற செயற்கைகோள் சேவை வழங்கும் நிறுவனம் வழங்கவிருக்கிறது. ஜியோவுக்கு நடுத்தர சுற்றுவட்டப்பாதை செயற்கைகோள் தொழில்நுட்பத்தை வழங்குகிறது SES. இந்நிறுவனத்தின் O3b மற்றும் O3b mபவர் செயற்கைகோள்களைக் கொண்டே இந்தியாவில் ஜியோ ஸ்பேஸ்ஃபைபர் சேவையை வழங்கவிருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் இணைய சேவை இல்லாமல் இருந்து வந்த இடங்களுக்கும், இணைய சேவைக்குமான பாலமாக தங்களுடைய இத்திட்டம் இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஜியோ.
ஜியோ ஸ்பேஸ்ஃபைபர் செயல் விளக்கம்:
ஜியோ ஸ்பேஸ்ஃபைபர் சேவையின் திட்டம் எந்தளவிற்கு செயல்திறனைதக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்ட இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்விலேயே செயல்படுத்தியும் காட்டியிருக்கிறது ஜியோ. இந்தியாவில் தொலைத்தொடர்பு கட்டமைப்பற்ற தொலைவில் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்து, அந்த இடங்களை ஜியோ ஸ்பேஸ்ஃபைப்ர தொழில்நுட்பத்தின் மூலம் இணையத்துடன் இணைத்துக் காட்டியிருக்கிறது ஜியோ. அதன்படி குஜராத்தின் கிர், சத்தீஸ்கரில் உள்ள கொர்பா, ஒடிசாவில் உள்ள நபரங்பூர் மற்றும் அஸாமில் உள்ள ONGC ஜோர்ஹாட் ஆகிய இடங்களை இந்த செயல்முறை விளக்கத்துக்காகப் தேர்ந்தெடுத்து செயல்படுத்திக் காட்டியிருக்கிறது அந்நிறுவனம். விரைவில் இந்த சேவையை இந்தியாவில் ஜியோ பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.