 
                                                                                ஜியோ பயனர்களுக்கு ஜாக்பாட்; ₹35,000 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ ஏஐ 18 மாதங்களுக்கு இலவசம்; எப்படி பயன்படுத்துவது?
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் மூலம், கூகுள் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட ஜியோ பயனர்களுக்கு ₹35,000 மதிப்புள்ள கூகுளின் ஜெமினி ப்ரோ ஏஐ சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அக்டோபர் 30 அன்று தொடங்கியுள்ள இந்தக் கால வரம்புக்குட்பட்ட சலுகை, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) விரைவாகப் பரவலாக்கும் நோக்கில், ரிலையன்ஸ் - கூகுள் இடையேயான விரிவான கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் நிறுவனமும் அறிவார்ந்த கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கவும், புதுமைப்படுத்தவும், வளரவும் முடியும் வகையில், இந்தியாவை ஏஐ மூலம் மேம்படுத்துவதே இந்தக் கூட்டணியின் நோக்கம் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
முக்கிய அம்சங்கள்
இலவச சேவையின் முக்கிய அம்சங்கள்
ஜெமினி ப்ரோ சேவையானது வரம்பற்ற உரையாடல்கள், 2TB கிளவுட் ஸ்டோரேஜ், Veo 3.1 மூலம் வீடியோ உருவாக்கம், நானோ பனானா வழியாகப் பட உருவாக்கம் மற்றும் பிற மேம்பட்ட ஏஐ கருவிகளை உள்ளடக்கியுள்ளது. ₹349 இலிருந்து தொடங்கும் தகுதியுள்ள அன்லிமிடெட் 5ஜி ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் உள்ள ஜியோ பயனர்கள், மை ஜியோ செயலியின் மூலம் இந்தச் சலுகையைச் செயல்படுத்திக் கொள்ளலாம். எனினும், 18 மாதங்களுக்கு தொடர்ந்து சேவையை தக்கவைத்திருக்க, ஜியோ எண்ணை மேலே குறிப்பிட்ட திட்டங்களில் தொடர்ந்து ரீசார்ஜ் செய்து வர வேண்டும். கூடுதலாக, ரிலையன்ஸ் கூகிள் கிளவுடுடன் இணைந்து, அதன் மேம்பட்ட ஏஐ வன்பொருள் முடுக்கிகளான டென்சார் பிராசஸிங் யூனிட்டுகளுக்கான (TPUs) அணுகலை விரிவுபடுத்துகிறது.