ஏலியன்களா? வானில் திரியும் விசித்திர பறக்கும் பொருள்களை ஆராய உள்ளது ஜப்பான்
அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள்(UFO) மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்(UAP) பற்றிய உலகளாவிய ஆர்வத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பானிய சட்டமியற்றுபவர்கள் ஒரு அனைத்து கட்சி குழுவைத் தொடங்கியுள்ளனர். இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகளை விசாரிக்க பிரத்யேக அமைப்பு ஒன்றை அமைக்குமாறு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசாங்கத்தை வலியுறுத்துவதே இந்தக் குழுவின் முதன்மை நோக்கமாகும். ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின்(எல்டிபி) நாடாளுமன்ற விவகாரத் தலைவர் யசுகாசு ஹமாடா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இக்குழுவில், எல்டிபியைச் சேர்ந்த ஷின்ஜிரோ கொய்சுமியும் பணியாற்ற உள்ளார். முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஷின்ஜிரோ கொய்சுமி இந்த குழுவின் பொது செயலாளர் ஆவார்.
அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்ற UAP குழு திட்டம்
மே 28 அன்று நடந்த ஆயத்த கூட்டத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த குழு, ஜூன் 6 ஆம் தேதி அதன் முதல் பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளது. ஜப்பானிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட UAP கள் ரகசிய ஆயுதங்களா அல்லது பிற நாடுகளின் ஆளில்லா உளவு ட்ரோன்களா என்பதை இந்த குழு விசாரிக்கும் என்று தொடக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகள் ஜப்பானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பதை தீர்மானிப்பதையே இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜப்பானிய UFO குழு UAP பற்றிய தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரும். இதேபோன்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.