
இந்திய விண்வெளி பயணத்தில் புதிய மைல்கல்; அமெரிக்காவின் 6,500 கிலோ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு வரலாற்று மைல்கல்லை அடையத் தயாராகி வருகிறது. அதாவது, வரும் மாதங்களில் இந்திய ஏவுகணையைப் பயன்படுத்தி அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வை இந்தியாவின் விண்வெளித் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க பாய்ச்சல் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் விவரித்தார். இது தொழில்நுட்ப இறக்குமதியாளர் என்ற இடத்திலிருந்து நம்பகமான உலகளாவிய ஏவுகணை கூட்டாளியாக நாடு மாறியதை பிரதிபலிக்கிறது. இஸ்ரோவின் ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்த வி.நாராயணன், விண்வெளித் திட்டம் 1963 ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஒரு சிறிய ராக்கெட்டை நன்கொடையாக வழங்கியபோது தொடங்கியது என்றார்.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருந்த இந்தியா
அந்த நேரத்தில் நாடு விண்வெளி தொழில்நுட்பத்தில் உலககின் முதன்மை நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் பின்தங்கியிருந்தது. 1975 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்க செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, இஸ்ரோ வெற்றிகரமாக ஒரு வெகுஜன தொடர்பு பரிசோதனையை நடத்தியது, ஆறு மாநிலங்களில் உள்ள பல கிராமங்களில் 2,400 தொலைக்காட்சிப் பெட்டிகளை அதன்மூலம் நிறுவியது. சமீபத்தில், ஜூலை 30 ஆம் தேதி, இஸ்ரோ உலகின் மிக விலையுயர்ந்த செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடாரை (NISAR) ஜிஎஸ்எல்வி-எஃப்16 இல் ஏவியது. இந்த திட்டம் அமெரிக்காவிலிருந்து L பேண்ட் SAR பேலோடை இஸ்ரோ உருவாக்கிய S பேலோடுடன் இணைத்து, அதன் துல்லியமான செயல்பாட்டிற்காக நாசாவிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.