இனி வெளிநாடுகளை சார்ந்திருக்க தேவையில்லை; அதிக எடைகொண்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 ஐ, தனது LVM3-M5 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது. 24 மணி நேர கவுண்டவுனுக்குப் பிறகு, மாலை 5:26 மணிக்கு 43.5 மீட்டர் உயரமுள்ள ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்தச் செயற்கைக்கோள் சுமார் 20 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, 180 கிமீ உயரத்தை அடைந்து, புவி ஒத்திசைவுப் பரிமாற்ற சுற்றுப்பாதையில் (Geosynchronous Transfer Orbit - GTO) வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
கடல்
கடல் பகுதிகளுக்கான தகவல் தொடர்பு சேவைகள்
CMS-03 என்பது பல அலைவரிசைத் திறன் கொண்டச் செயற்கைக்கோள் ஆகும். இது இந்தியப் பிராந்தியம் மற்றும் பரந்த கடல் பகுதி முழுவதும் தகவல் தொடர்புச் சேவைகளை வழங்கும் திறன் கொண்டது. இந்தச் செயற்கைக்கோள், இந்திய ராக்கெட் மூலம் GTO வில் ஏவப்பட்ட மிக அதிக எடைகொண்டச் செயற்கைக்கோள் என்ற மைல்கல்லை அடைந்துள்ளது. இதற்கு முன்னர், 5,854 கிலோ எடையுள்ள GSAT-11 போன்ற கனமானச் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இந்தியா வெளிநாடுகளை (பிரெஞ்சு கயானா) நம்பியிருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த வெற்றியின் மூலம், அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களைத் தற்சார்புடன் உள்நாட்டிலிருந்தே ஏவும் இந்தியாவின் திறன் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.