இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை வெற்றி
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளித் திட்டத்தின் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கனவுத் திட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே சில சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. இதன் ஒரு அங்கமாக திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் ஐந்தாம் கட்ட என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
என்ஜின் சோதனை
என்ஜின் சோதனையின் ஒரு பகுதியாக, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பயன்படுத்தப்படும் எஸ்.எம்.எஸ்.டி.எம் என்ஜின் சோதனைகளும் இங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த என்ஜினின் ஐந்தாம் கட்ட சோதனை 1700 வினாடிகளுக்கு நடைபெற்றது. முன்னதாக இதற்கான கவுண்டவுனை ஆரம்பித்த இஸ்ரோ, சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இஸ்ரோவின் மகேந்திரகிரி மையத்தின் இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் மேற்பார்வையில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும், திருவனந்தபுரம் திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோரும் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் என்ஜினின் சோதனை ஓட்டத்தை நேரில் கண்டனர்.