ட்விட்டருக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்களிடையே மதிப்பிழந்து வரும் Threads
கடந்த ஜூலை 6-ம் தேதி ட்விட்டருக்கு போட்டியான தங்களது த்ரெட்ஸ் சமூக வலைத்தளத்தை உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டது மெட்டா. இன்ஸ்டாகிராமுடன் இணைந்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய வலைத்தளமானது, வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரங்களிலேயே 2 மில்லியன் பயனாளர்களைப் பெற்று அசத்தியது. ஆனால், தற்போது த்ரெட்ஸ் சமூக வலைத்தளமானது 100 மில்லியன் பயனாளர்களைக் கடந்திருக்கும் நிலையில், நாட்கள் செல்லச் செல்ல நெட்டிசன்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக த்ரெட்ஸ் தளம் வரவேற்பை இழந்து வருவதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் ட்விட்டர் பயனர்கள் சிலர். ஜூலை 6-ல் வெளியிடப்பட்ட அன்றும், அதனைத் தொடர்ந்த நாட்களிலும் கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட சமூக வலைத்தளமாக இருந்திருக்கிறது த்ரெட்ஸ். ஆனால், அதனைத் பின்பு த்ரெட்ஸ் குறித்த தேடல்கள் குறைந்திருக்கின்றன.
ஏன் மதிப்பிழந்து வருகிறது த்ரெட்ஸ்?
தினசரி பயனர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் த்ரெட்ஸில் குறைந்து வருவதை மற்றொரு ட்விட்டர் பயனர் சுட்டிக் காட்டியிருக்கிறார். எலான் மஸ்க் ட்விட்டரை கையாளும் போக்கு பல ட்விட்டர் பயனர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ட்விட்டருக்கு போட்டி என அறிவிக்கப்பட்ட த்ரெட்ஸில் ட்விட்டரில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இல்லை. முக்கியமாக, கணினியில் பயன்படுத்தும் வசதி த்ரெட்ஸில் இல்லை. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தும் வகையிலான செயலிகளை மட்டுமே வெளியிட்டிருக்கிறது மெட்டா. ட்விட்டரில் ஏற்கனவே இருக்கும் சில அம்சங்களை மட்டுமே கொண்டு த்ரெட்ஸ் சமூக வலைத்தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ட்விட்டருக்கு போட்டி எனக் கூறும் வகையில் புதிய வசதிகள் எதுவும் இல்லை. இந்த காரணங்களால், த்ரெட்ஸ் பயனர்கள் மத்தியில் மதிப்பிழந்து வரலாம் எனக் கூறப்படுகிறது.