புதிய மின்னணு சாதனத்தை வெளியிடுகிறதா நத்திங்.. 2024 ஜனவரியில் புதிய நிகழ்வு?
சில மாதங்களுக்கு முன்பு தான் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போனான போன் (2)-வை வெளியிட்டது நத்திங். தற்போது மற்றொரு புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிடவிருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் அதன் தலைமை செயல் அதிகாரியான கார்ல் பெய். தற்போது தங்களுடைய லைன்அப்பில் மூன்று ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களைக் கொண்டிருக்கிறது நத்திங். வரும் 2024 ஜனவரியில் புதிய மின்னணு சாதனம் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். அது கண்டிப்பாக ஸ்மார்ட்போன் இல்லை. இயர்பட்ஸ் (2) வெளியாகி இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை என்பதால் கிட்டத்தட்ட அதுவும் இல்லை. நத்திங் இயர் ஸ்டிக்குக்கு ஒரு புதிய அப்கிரேடா அல்லது முற்றிலும் புதிய சாதனத்தை ஜனவரியில் வெளியிடவிருக்கிறதா நத்திங்?
நத்திங்கின் ஜனவரி நிகழ்வு:
தற்போது அனைத்து விதமான தொழில்நுட்ப நிறுனங்களும் தங்களுடைய புதிய மின்னணு சாதனங்களை வெளியிட தனித்தனியாக புதிய நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. அது போலான ஒரு நிகழ்வையே ஜனவரியில் மாதத்தில் நடத்தத் திட்டமிட்டு வருகிறது நத்திங். அந்த நிகழ்வில் புதிய மின்னணு சாதனம் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த நிகழ்வு குறித்த அப்டேட்டையே அடுத்த வாரம் அந்நிறுவனம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பு குறித்தே எக்ஸ் தளத்தில் தன்னுடைய பக்கத்தில் நத்திங்கின் சிஇஓ காரல் பெய் ஒரு சிறுகுறிப்பை கொடுத்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.