ட்விட்டரை ரீபிராண்டிங் செய்யவிருக்கும் எலான் மஸ்க்
ட்விட்டரை முழுவதுமாக ரீபிராண்டி செய்யத் திட்டமிட்டிருப்பதாகக் கூறி இன்று காலை முதலே தொடர்ச்சியாகப் பல பதிவுகளை அந்தத் தளத்தில் பதிவிட்டு வருகிறார் எலான் மஸ்க். ட்விட்டரை வாங்கிய போதிருந்தே, சீனாவின் 'வீசாட்'டைப் போல அனைத்து சேவைகளுக்குமான ஒரு தளமாக ட்விட்டரை மாற்ற வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது தன்னுடைய கருத்தை தெரிவித்து வந்திருக்கிறார் எலான் மஸ்க். இந்த புதிய அனைத்துக்குமான செயலிக்கு 'X' என்ற பெயரை சூட்டுவது குறித்து முன்னர் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்திருக்கிறார் எலான். தற்போது அதனை மெய்ப்பிக்கும் வகையில், X என்ற பெயரில் ரீபிராண்டிங் செய்யவிருக்கிறோம் என்ற ரீதியில் பல்வேறு ட்விட்டர் பதிவுகளைப் பதிவிட்டிருக்கிறார் அவர்.
ரீபிராண்டிங் செய்யப்படுகிறதா ட்விட்டர்:
இன்று தான் பதிவிட்ட பல்வேறு ட்விட்டர் பதிவுகளுள் ஒன்றில், "ட்விட்டர் பிராண்டுக்கும், அதன் சின்னமான நீல நிற பறவைக்கும் விரைவில் விடைகொடுக்கவிருக்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார் அவர். மற்றொரு பதிவில், ட்விட்டர் தளத்தின் நிறத்தை நீல நிறத்திலிருந்து, கருப்பு அல்லது சாம்பல் நிறமாக மாற்றுவது குறித்து பயனர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். இன்னொரு, சமீபத்திய பதிவில், ட்விட்டரின் நீல நிற சின்னம் மறைந்து அதன் மேல் X என்ற புதிய சின்னம் தோன்றுவது போலான காணொளியைப் பதிவிட்டிருக்கிறார் எலான் மஸ்க். மேலும், இன்று இரவு X என்ற புதிய லோகோவைப் பதிவிடவிருப்பதாகவும், நாளை நேரலை செய்யவிருப்பதாகவும் கூட ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர். ட்விட்டர் என்ன மாற்றம் நிகழவிருக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.