ஸோமாட்டோவுடன் இணைந்து ரயிலில் உணவு டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய ரயில்வே
ரயில் பயணங்களின் போது நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுள் ஒன்று உணவு. நாம் விரும்பும் வகையிலான உணவை ரயில் பயணங்களின் போது நாம் பெற முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இதுவரை பல்வேறு வகையிலான தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது அதே போன்று மற்றொரு புதிய தீர்வுடன் களமிறங்கியிருக்கிறது இந்திய ரயில்வே. அதன்படி தங்களுடைய இ-கேட்டரிங் சேவை மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை ஸோமாட்டோ மூலம் டெலிவரி அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்திய ரயில்வே. இந்த வசதியின் கீழ் நாம் விரும்பும் உணவை பெற, அவற்றை நாம் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். முன்பதிவு செய்யப்பட்ட உணவை நாம் தேர்ந்தெடுக்கும் ரயில் நிலையத்தில் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
எப்படி செயல்படுத்தப்படவிருக்கிறது இந்தத் திட்டம்?
ரயில் பயண நாளன்று குறிப்பிட்ட உணவை நாம் இந்திய இரயில்வேயின் இ-கேட்டரிங் செயலி மூலம் முன்பதிவு செய்து விட வேண்டும். அந்த உணவை எந்த ரயில் நிலையத்தில் பெற விரும்புகிறோம் என்பதையும் குறிப்பிட்டு விட வேண்டும். நம்முடைய ரயில் எப்போது ரயில் நிலையத்தை அடையும் என்பதைக் கணக்கிட்டு அந்த உணவை ஸோமாட்டோ நமக்கு டெலிவரி செய்து விடும், அவ்வளவு தான். இந்தப் புதிய வசதியை தற்போது பரீட்சார்ந்த முயற்சியாக புதுடெல்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரனாசி ஆகிய ஐந்து நகர ரயில் நிலையங்களில் மட்டும் அமல்படுத்தியிருக்கிறது இந்திய ரயில்வே. இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவின் பிற ரயில் நிலையங்களிலும் இந்தத் வசதி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.