ஐபோன் 12 கதிர்வீச்சு அளவுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு ஊழியர்களிடம் ஆப்பிள் அறிவுறுத்தல்
ஐபோன் 12 யூனிட்களின் அனைத்து விற்பனையையும் நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தை, பிரான்ஸ் வற்புறுத்தியதை அடுத்து, கதிர்வீச்சு தரநிலைகள் காரணமாக ஐபோன் 12 -ஐ திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியது. ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடன்படவில்லை என்றாலும், மற்ற ஐரோப்பிய நாடுகள் பிரான்சுடன் இணைந்து ஐபோன் 12 கதிர்வீச்சு குறித்தும், அதன் விற்பனையை நிறுத்துமாறும் கூறியது. இந்த சூழ்நிலையில், ஐபோன் 12 இன் கதிர்வீச்சு அளவுகள் குறித்து கருத்து கூரக்கூடாது எனவும், அமைதி காக்குமாறும், தனது ஊழியர்களை ஆப்பிள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஐபோன் 12 கதிர்வீச்சு குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க ஆப்பிள் மறுக்கிறதா?
ப்ளூம்பெர்க்கின் புதிய அறிக்கையின்படி , கதிர்வீச்சு அபாயங்கள் குறித்து நுகர்வோர் கேட்கும் போது எந்த தகவலையும் வழங்க வேண்டாம் என்று ஆப்பிள் அதன் தொழில்நுட்ப ஆதரவு குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளது. "பகிர்ந்து கொள்ள எதுவும் இல்லை" என்று கூறுமாறும் தொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஐபோன் 12 -ஐ வாங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு தொலைபேசிகளைத் திரும்பப் பெறவோ அல்லது மாற்றவோ முடியாது என்பதை வலுப்படுத்தவும் அவர்களிடம் கூறப்பட்டது. "தொலைபேசி பாதுகாப்பானதா என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, 'வழிகாட்டுதலின்படி, அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளும் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்த கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன' என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்" என்று அறிவுறுத்த பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.
பிரான்ஸைப் பின்பற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்?
பிரெஞ்சு கட்டுப்பாட்டாளரின் கூற்றுப்படி, ஐபோன் 12 சாதனங்கள் கதிர்வீச்சு வெளிப்பாட்டிற்கான சட்ட வரம்புகளை மீறுகின்றன. ஐபோன் 12 வெளியிடும் கதிர்வீச்சின் அளவைக் குறைக்கும் வகையில், ஆப்பிள் மென்பொருள் அப்டேட்டை வெளியிட வேண்டும் என பிரான்ஸ் நாட்டின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். பிரான்ஸின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ஜெர்மனியும் பிரான்ஸின் பாதையைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. ஸ்பெயினிலும் ஐபோன் 12ன் விற்பனையை நிறுவத்துவது குறித்து பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக ஐபோன்களை விற்பனை செய்து வருகிறது ஆப்பிள். ஐரோப்பிய நாடுகளின் இந்த முடிவால், ஆப்பிள் நிறுவனம் சரிவைச் சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.