புதிய AI வசதிகளை அறிமுகப்படுத்துகிறதா இன்ஸ்டாகிராம்?
தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சமூக வலைத்தள நிறுவனங்கள் வரை அனைத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளை தங்களுயை சேவைகளில் அறிமுகப்படுத்த போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன. மெட்டாவை தாய் நிறுவனமாகக் கொண்ட இன்ஸ்டாகிராமும் AI வசதியுடன் கூடிய சாட்பாட்டை உருவாக்கி வருவதாக தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார் டெவலப்பரான அலெசான்ட்ரோ பலூஸி. இன்ஸ்டாகிராமில் நாம் சாதாரணமாக மற்றவர்களுடன் சாட் செய்யும் போது பயன்படுத்தும் வகையில் இந்த AI சாட்பாட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. தன்னுடைய ட்விட்டர் பதிவில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் உருவாக்கி வரும் AI வசதிகள் குறித்த சில ஸ்கிரீன்ஷாட்களையும் இணைத்திருக்கிறார் பலூஸி.
AI வசதிகளை அறிமுகப்படுத்துகிறதா இன்ஸ்டாகிராம்?
இந்தப் புதிய வசதியின் மூலம், நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிப்பது, ஆலோசனைகள் வழங்குவது மற்றும் நமக்கான குறுஞ்செய்திகளை உருவாக்கித் தருவது உள்ளிட்ட செயல்களை செய்ய முடியுமாம். மேலும், AI வசதியுடன் சாட்களில் ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதி ஒன்றையும் இன்ஸ்டாகிராம் உருவாக்கி வருவதாக சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் இவர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த AI சாட்பாட் வசதி குறித்த எந்த தகவலையும் இன்ஸ்டாகிராமோ அல்லது மெட்டா நிறுவனமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. தற்போது உருவாக்கத்தில் மட்டுமே இருக்கின்றன இந்த வசதிகள். இவை பின்னாளில் பயனர்களின் பயன்பாட்டிற்கு வரலாம் அல்லது ஒட்டுமொத்தமாக அறிமுகப்படுத்தப்படாமலே கூட போகலாம்.