ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம்
இந்தியாவில் ஷார்ட் வீடியோக்களுக்கான பிரதானத் தளமாகிவிட்டது இன்ஸ்டாகிராம். 2020-ம் ஆண்டு வரை இந்தியாவின் முன்னணி ஷார்ட் வீடியோ தளமாக விளங்கி வந்தது டிக்டாக். 2020-ல் டிக்டாக் தடை செய்யப்பட்டதையடுத்து, அந்த இடத்தை பிடித்திக் கொண்டது இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் வசதி. தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புதிய வசதி ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இனி, நமக்கு பிடித்தமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பார்க்க, பகிர மட்டுமல்ல பதிவிறக்கம் செய்தும் வைத்துக் கொள்ளலாம். ரீல்ஸை பதிவிறக்கம் செய்யும் வகையிலான புதிய வசதியை தங்கள் செயலியில் தற்போது அளித்திருக்கிறது. ஆனால், தற்போது இந்த வசதியானது அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த வசதியானது பிற நாட்டுப் பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தினாலும், அதிலும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது இன்ஸ்டாகிராம். பொதுக் கணக்குகளில் இருக்கும் ரீல்ஸ்களை மட்டுமே இன்ஸ்டா பயனர்களால் பதிவிறக்கம் செய்ய முடியும். பிரைவேட் கணக்குகள் மூலம் பதிவிடப்படும் ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும், தங்களுடைய ரீல்ஸ்களில் பயனர்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொடுக்கும் வகையில், தங்களுடைய ரீல்ஸ்களை மற்றவர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஒரு ரீல்ஸை தற்போது பதிவிறக்கம் செய்வதற்கான வசதியை பகிர்வதற்கான வசதியின் உள்ளேயே அளித்திருக்கிறது இன்ஸ்டாகிராம். இதுவரை ஒரு குறிப்பிட்ட ரீல்ஸை பதிவிறக்கம் செய்ய மூன்றாம் தர செயலிகள் மற்றும் தளங்களை இன்ஸ்டாகிராம் பயனர்கள் பயன்படுத்தி வந்து நிலையில், அதிகாரப்பூர்வமா அந்த வசதியை தற்போது அளித்திருக்கிறது இன்ஸ்டாகிராம்.