வெளியான சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்த 'இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30' ஸ்மார்ட்போன்
இந்திய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் பிரிவில் 'ஜீரோ 30 5G' என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிக்ஸ். ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே இந்த ஸ்மார்ட்போன் விற்றுத் தீர்ந்திருப்பதாகத் எக்ஸில் பதிவிட்டிருக்கிறது அந்நிறுவனம். என்னென்ன வசதிகளுடன் வெளியானது இந்தப் புதிய 'இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 5G' ஸ்மார்ட்போன்? 144Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட XOS 13 இயங்குதளம் ஆகியவை இந்த ஜீரோ 30 5Gயில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பின்பக்கம் 108MP முதன்மைக் கேமரா, 13MP அல்ட்ரா வைடு மற்றும் 2MP என ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்ஃபினிக்ஸ் ஜீரோ 30 5G: ப்ராசஸர் மற்றும் விலை
இந்தப் புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8020 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்துடன் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. 5G, ப்ளூடூத் 5.3, வைபை 6, GPS, NFC மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆகிய கனெக்டிவிட்டி வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இன்டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜீரோ 30 5Gயின் அடிப்படை வேரியன்டான 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.23,999 விலையிலும், டாப் எண்டான 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.24,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது இன்ஃபினிக்ஸ்.