இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன?
கடந்த மாதம், AIIMS -இன் இணையதளம் ஹேக் செய்யப்பட்ட பின், அடுத்ததாக இந்திய ரயில்வேயின் சர்வர் குறிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்திய ரயில்வேயின் சர்வர், டிசம்பர் 27 அன்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. இரண்டு மாத கால இடைவெளியில், ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட இரண்டாவது அரசுத் தலைமையகம், இந்திய ரயில்வே. ஒரு தனியார் நிறுவனத்தின் அறிக்கையின்படி, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த, 30 மில்லியன் பயணிகளின் தரவு இப்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக, பொதுத்துறை நிறுவனங்கள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இப்போது கேள்விக்குள்ளாகி உள்ளது. இந்தத் தாக்குதல் உண்மையாக இருந்தால், இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனங்கள், இணையப் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதற்கு தாமதமாகிவிட்டன என்பதற்கான அறிகுறியாகும்.
இந்திய ரயில்வேயின் இணையதளம்
ரயில்வே இணையதளத்தில், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 30 மில்லியன் மக்களின் முக்கியமான தரவுகள் இப்போது களவாடப்பட்டுள்ளது என மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன. மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், வயது, முகவரி மற்றும் பாலினம் போன்ற நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட தரவுகளில் அடங்கும். அதில் பல அரசாங்க மின்னஞ்சல் முகவரிகளும் அடக்கம். ஹேக்கர் ஃபோரம் பயனர் ஒருவர், ரயில்வேயின் பயனர் தரவுகளை விற்பதைக் கண்ட பிறகு தான், இந்திய ரயில்வே மீதான சைபர் தாக்குதல் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. விற்றவர் அடையாளம் தெளிவாக தெரியவில்லை. "ஷேடோஹேக்கர்" என்ற புனைபெயரில், செயல்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதை இந்தியா ரயில்வே துறை மறுத்துள்ளது. தங்களின் இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.