
இந்தியாவில் மேலும் 9 சூப்பர் கம்யூட்டர்களை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் திட்டத்தின் கீழ், 18 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டு தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கால வரையரை நீட்டிக்கப்பட்டு, அதன் கீழ் புதிதாக 9 சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
ரூ.14,903 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்தத் திட்டம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், முந்தைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தொடர்ச்சியாக இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா
இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் டாப் சூப்பர் கம்ப்யூட்டர்கள்:
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெர்மனியில் நடைபெற்ற, 61வது சர்வதேச சூப்பர் கம்ப்யூட்டிங் மாநாட்டில், உலகின் டாப் 500 சூப்பர் கம்ப்யூட்டர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட 18 சூப்பர் கம்யூட்டர்களில், 4 சூப்பர் கம்ப்யூட்டர்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட 13,170 டெராஃப்ளாப்ஸ் வேகம் கொண்ட AIRAWAT சூப்பர் கம்ப்யூட்டரானது, இந்தப் பட்டியலில் 75வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த சூப்பர் கம்யூட்டரானது புனேவில் உள்ள C-DAC மையத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், அந்தப் பட்டியலில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட PARAM Siddhi-AI கம்யூட்டரானது, 131வது இடத்தையும், ப்ரத்யுஷ் சூப்பர் கம்ப்யூட்டரானது 169வது இடத்தையும், மிகிர் சூப்பர் கம்யூட்டரானது 316-வது இடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.