உலகளாவிய புதுமைக் குறியீட்டை வெளியிட்டது WIPO அமைப்பு; இந்தியாவிற்கு எந்த இடம்?
2023ம் ஆண்டிற்கான உலகளாவிய புதுமைக் குறியீட்டுப் பட்டியலில் 40வது இடத்தைத் தக்க வைத்திருக்கிறது இந்தியா. உலகளவில், ஒவ்வொரு நாடும் அனைத்து துறைகளிலும் எந்தளவிற்கு புதுமைகளைப் புகுத்துகிறது மற்றும் அது எந்தளவிற்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் பல்வேறு காரணிகளை கொண்டு இந்தப் புதுமைக் குறியீடு கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐநாவின் அமைப்புகளுள் ஒன்றான உலக அறிவுசார் சொத்து அமைப்பானது இந்த புதுமைக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் கடந்த 2015ம் ஆண்டு 81வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்தாண்டு 40வது இடத்துக்கு முன்னேறியிருந்தது. இந்த ஆண்டு எந்த மாற்றமும் இன்றி அந்த இடத்தைத் தக்க வைத்திருக்கிறது.
13 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து
இந்த புதுமை குறியீட்டுப் பட்டியலில் கடந்த 12 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வரும் ஸ்விட்சர்லாந்து, 13வது ஆண்டாக தற்போது அதனைத் தக்க வைத்திருக்கிறது. இந்த ஆண்டு, ஸ்விட்சர்லாந்தைத் தொடர்ந்து, சுவீடன், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்திருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில், புதுமைக் குறியீட்டில் வேகமாக முன்னேறிய நாடுகளுள் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறது இந்தியா. உலகளவில் 50 நாடுகளில் மொத்தம் 1,206 யூனிகார்ன் நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுள் 80% நிறுவனங்கள் வெறும் 5 நாடுகளிலேயே இருப்பதாக இந்தாண்டு புதுமைக் குறியீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஐந்து நாடுகளில் 6% யூனிகார்ன் நிறுவனங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.