விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா
நிலவை ஆய்வு செய்ய சந்திரயானை திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, மனிதர்களைக் கொண்டு ஆழ்கடலை ஆய்வு செய்யும் 'சமுத்திரயான்' திட்டத்திற்குத் தயாராகி வருகிறது இந்தியா. இத்திட்டத்திற்காக 'மத்சியா 6000' என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி ஒன்று சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப மையத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. மத்சியா 6000 உருவாகி வருவது குறித்த பதிவொன்றை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. "ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டம் இந்த சமுத்திரயான். இத்திட்டத்தின் கீழ், 3 பேரை 6,000 அடி ஆழம் வரை கடலுக்குள் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது, பிரதமர் மோடியின் நீலப் பொருளாதார இலக்கை அடைய உதவும்", எனப் பதிவிட்டிருக்கிறார் அவர்.
சமுத்திரயான் திட்டம்:
இந்தியாவின் கடலோரப் கண்டப் படுகைகள் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் ஆழ்கடல் வளங்கள் ஆய்வு செய்யவும், பல்லுயிர் மதிப்பீட்டை மேற்கொள்ளவும் சமுத்திரயான் திட்டம் தொடங்கப்பட்டது. ஆழ்கடல் படுகைகள் ஆய்வு செய்வதற்காக, மத்சிய 6000 நீர்மூழ்கியை உருவாக்குவதும் இத்திட்டத்தின் ஒரு அங்கமே. இத்திடத்திற்காக, பல கட்டங்களாக ரூ.4,077 கோடி வரை ஒதுக்குகிறது மத்திய அரசு. இந்தியாவிடம் 8,50,000 சதுர மைல்கள் பரப்பிற்கு, ஆய்வு செய்யப்படாத பிரத்தியேக பொருளாதார மண்டலமும் இருக்கிறது. மேலும், மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் 58,000 சதுரமைல்களை 'பாலிமெட்டாலிக் நோடில்'களின் ஆய்விற்காக இந்தியாவிற்கு ஒதுக்கியிருக்கிறது சர்வதேச கடல்படுகை அமைப்பு. 2,000 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் மேற்கூறிய பகுதியில் 29,000 சதுரமைல்கள் பரப்பரளவிற்கு மட்டும் தற்போது வரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா.
'பாலிமெட்டாலிக் நோடில்'கள்:
ஆழ்கடல் படுகையில் பல்வேறு தனிமங்கள் மற்றும் உலோகங்கள் கலந்து முடிச்சுக்களே பாலிமெட்டாலிக் நோடில்கள் (Polymetallic Nodules) என்றழைப்படுகின்றன. இந்த நோடில்களிலிருந்து உலகங்களைப் பிரித்தெடுப்பது மின்னணு சாதனங்கள், பேட்டரிக்கள் மற்றும் சூரிய ஒளித் தகடுகள் எனப் பல்வேறு வடிவங்களில் நாம் பயன்படுத்த முடியும். சமுத்திரயான் திட்டத்தின் கீழ் இவற்றையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இந்த பாலிமெட்டாலிக் நோடில்களை ஆய்வு செய்வதற்காக சர்வதேச கடல்படுகை அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கியிருக்கும் 58,000 சதுர மைல்கள் பரப்பளவில், 380 மில்லியன் மெட்ரிக் டண்கள் பாலிமெட்டாலிக் நோடில்கள் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் 10 சதவிகிதத்தை மீட்க முடிந்தாலே, இந்தியாவின் அடுத்த 100 வருடங்களுக்குத் தேவையான ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமாம்.
மத்சியா 6000:
இந்தியாவின் ஆழ்கடல் ஆய்விற்காக இஸ்ரோவான வடிவமைக்கப்பட்ட, சென்னையில் உள்ள பெருங்கடல் தொழில்நுட்ப மையத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது 'மத்சியா 6000'. மத்சியா என்றால் இந்தி மொழியில் மீன் எனப் பொருளாம். மூன்று பேர் ஆழ்கடலுக்குள் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியைக் கொண்டு 12 மணி நேரம் வரை ஆழ்கடலில் ஆய்வு செய்ய முடியும். அவசர காலங்களில் 96 மணி நேரம் வரை கூட இந்த நீர்மூழ்கியில் மனிதர்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமாம். 2026-ம் ஆண்டு இத்திட்டமானது முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் முன்னாள் புவி அறிவியல் துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங். ஆனால், இதன் முதல் பரிசோதனை முயற்சி அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் எக்ஸ் பதிவு:
Next is "Samudrayaan" This is 'MATSYA 6000' submersible under construction at National Institute of Ocean Technology at Chennai. India's first manned Deep Ocean Mission 'Samudrayaan' plans to send 3 humans in 6-km ocean depth in a submersible, to study the deep sea resources and... pic.twitter.com/aHuR56esi7— Kiren Rijiju (@KirenRijiju) September 11, 2023