இணையம் இல்லாமலே ஏஐ வேலை செய்யும்; இந்தியாவில் 3 புதிய ஏஐ மாடல்கள் அறிமுகம்; முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
இந்திய தொழில்நுட்பத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, மூன்று புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா ஏஐ மிஷன் அமைப்பின் ஆதரவுடன் பெங்களூரை சேர்ந்த சாக்கெட் லேப்ஸ் மற்றும் ஜென்டேக் ஏஐடெக் ஆகிய நிறுவனங்கள் இந்த கருவிகளை உருவாக்கியுள்ளன. புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் முன்னிலையில் இப்புதிய ஏஐ மாடல்கள் முறைப்படி வெளியிடப்பட்டன.
எகா-1
22 இந்திய மொழிகளைப் புரிந்து கொள்ளும் சக்திவாய்ந்த எகா-1 மாடல்
சாக்கெட் லேப்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள எகா-1 (EKA-1) மாடலானது 26.3 பில்லியன் பாராமீட்டர்கள் மற்றும் 7.5 டிரில்லியன் டோக்கன்கள் தரவுகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்ட மிகப்பரிய ஏஐ அமைப்பாகும்.
இந்த கருவி ஆங்கிலம் உட்பட இந்தியாவின் 22 அட்டவணைப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகளையும் மிக எளிதாகப் புரிந்துகொண்டு பதிலளிக்கும் திறன் கொண்டது.
உயர்மட்ட கணிதக் கணக்கீடுகள், மென்பொருள் புரோகிராமிங் மற்றும் தருக்க சிந்தனைகளை துல்லியமாக செய்யும் திறன் கொண்டுள்ளதால் வங்கியியல், நிதி மற்றும் சைபர் பாதுகாப்புத் துறைகளுக்கு இது பெரிதும் உதவும்.
தீர்
இணைய வசதி இன்றியே மொபைல்களில் இயங்கும் தீர் ஏஐ மாடல்கள்
ஜென்டேக் ஏஐடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தீர் 2பி (Dhir 2B) மற்றும் தீர் 5பி (Dhir 5B) ஆகிய மாடல்கள் அன்றாடப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட சிறிய ரக மாடல்களாகும்.
இவை ஆங்கிலம் மற்றும் 10 இந்திய மொழிகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவை.
ஆவணங்களைத் தேடுதல், முக்கியத் தகவல்களைத் திரட்டுதல் மற்றும் தினசரி அலுவலக வேலைகளைத் தானியங்கி முறையில் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவிகள், இணைய இணைப்பு அல்லது பெரிய கிளவுட் சர்வர்கள் எதுவுமே இன்றி நேரடியாக மொபைல் மற்றும் லேப்டாப்களில் ஆஃப்லைனில் இயங்கும்.
இந்தியா ஏஐ மிஷன்
தகவல் பாதுகாப்பும் மத்திய அரசின் இந்தியா ஏஐ மிஷன் நிதியுதவியும்
ஆஃப்லைன் முறையில் இயங்குவதால் பயனர்களின் தனிப்பட்ட ரகசியத் தரவுகள் சாதனத்தை விட்டு வெளியேறாது என்பது இக்கருவிகளின் மிகப்பெரிய சிறப்பாகும்.
இதனால் பாதுகாப்புத் துறை, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது ரகசியத் தரவுகளை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்க இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
இதுபோன்ற மிகப்பெரிய ஏஐ மாடல்களை உருவாக்கத் தேவைப்படும் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் கணக்கீட்டு வசதிகள் மற்றும் ஆராய்ச்சி செலவுகளுக்கான மானியங்களை இந்தியா ஏஐ மிஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கி இந்த தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.