இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்; தமிழ்நாட்டு தனியார் நிறுவனம் சாதனை
இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1'ஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியாவால் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட், சென்னை திருவிடந்தை, இசிஆரில் உள்ள டிடிடிசி மைதானத்தில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலம் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மூன்று கியூப் செயற்கைக்கோள்கள் மற்றும் ஐம்பது பிகோ (PICO) செயற்கைக்கோள்களை விண்ணுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த திட்டத்தில் ஒத்துழைத்த மார்டின் குழுமம், ராக்கெட்டின் பல்துறை திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி ஏவுதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டது.
RHUMI 1 வெற்றிகரமாக ஏவப்பட்டது
ராக்கெட்டின் சிறப்பம்சங்கள்
சரிசெய்யக்கூடிய ஏவுகணைக் கோணம்: ராக்கெட் 0 முதல் 120 டிகிரி வரை துல்லியமாக சரிசெய்யக்கூடிய ஒரு ஏவுதல் கோணத்தைக் கொண்டுள்ளது. இது அதன் பாதையை உன்னிப்பாகக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. கல்வித் தாக்கம்: இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து இலவச பயிற்சிப் பட்டறைகள் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. CO2 தூண்டப்பட்ட பாராசூட் அமைப்பு: ஒரு புதுமையான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த செயல்முறையானது ராக்கெட் பாகங்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதை உறுதி செய்கிறது. விண்வெளி ஆய்வுக்கு அப்பால்: இது விண்வெளி ஆய்வுக்கு அப்பால் விவசாயம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பகுதிகளுக்கும் பயன்படுத்தப்படும்.