இனி ஆதார் அப்டேட்டிற்கு அலைய தேவையில்லை; விரைவில் e-Aadhaar செயலி அறிமுகம் செய்யப்படும் என UIDAI அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியக் குடிமக்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), e-Aadhaar என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்தச் செயலி, தொடர்பு எண்கள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் போன்றவற்றை மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே பாதுகாப்பாகப் புதுப்பிக்கும் வசதியை வழங்கும். இதன் மூலம், சிறிய மாற்றங்களுக்குக்கூட ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியம் நீக்கப்படும். தற்போது, பெயர், பிறந்த தேதி அல்லது முகவரி போன்ற ஆதார் விவரங்களில் மாற்றங்கள் செய்ய, ஆதார் சேவை மையத்திற்குச் சென்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
செயலி
புதிய செயலியில் எளிதாக திருத்தலாம்
இந்த புதிய e-Aadhaar செயலி மூலம் மேலே குறிப்பிட்ட விவரங்களில் புதுப்பித்தல் செயல்முறை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. பயனர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி மற்றும் பிற புள்ளிவிவரத் தகவல்களை எளிதாக மாற்றியமைக்க முடியும். இந்தச் செயலி, அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தரவுத்தளங்களுடன் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற ஆதரவு ஆவணங்களின் தானியங்கிச் சரிபார்ப்பு (Automatic Validation) சாத்தியமாகும்.
விரைவான சேவை
புதுப்பித்தல்களை விரைவாக மேற்கொள்ள முடியும்
இது புதுப்பித்தல்களை விரைவுபடுத்துவதுடன், தரவுப் பிழைகள் மற்றும் மோசடிகளைக் குறைக்கவும் உதவும். பாதுகாப்பை மேம்படுத்த, UIDAI நிறுவனம் பயனர்களைப் பாதுகாப்பாக அங்கீகரிக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் முக அங்கீகாரத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், கைரேகைகள் அல்லது கண் கருவிழிப் பதிவு போன்ற பயோமெட்ரிக் மாற்றங்களுக்கு மட்டும் ஆதார் மையங்களுக்குச் செல்ல வேண்டியது அவசியமாகும். இந்தச் செயலி 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே mAadhaar செயலி இருந்தாலும், அதன் பயன்பாடு மிக குறுகியதாக இருக்கும் நிலையில், இந்த புதிய e-Aadhaar செயலி அனைத்து சேவைகளையும் வழங்கும் விரிவான ஒரு தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.