செவ்வாயில் தமிழக, கேரள பெயர்கள்: பெரியார், தும்பா, வர்கலா இனி செவ்வாய் கிரக பள்ளங்கள்
செய்தி முன்னோட்டம்
கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU), செவ்வாய் கிரகத்தில் புதிதாக கண்டறியப்பட்ட பல புவியியல் அமைப்புகளுக்கு கேரளாவில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற புவியியலாளர் ஒருவரின் பெயர்களை சூட்ட ஒப்புதல் அளித்துள்ளது. கேரள விஞ்ஞானிகளான ஆசிஃப் இக்பால் கக்கசேரி மற்றும் ராஜேஷ் வி.ஜே. ஆகியோரால் முன்மொழியப்பட்ட இந்தப் பெயர்கள், செவ்வாயின் "சாந்தே டெர்ரா" (Xanthe Terra) பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நீர் இருந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்திய பெயர்கள்
செவ்வாயில் இடம் பிடித்த இந்திய பெயர்கள்
கிருஷ்ணன் பள்ளம் & கிருஷ்ணன் சமவெளி: இந்தியாவின் முதல் புவியியல் ஆய்வு மைய இயக்குநரும், தமிழகத்தின் தஞ்சாவூரில் பிறந்தவருமான புகழ்பெற்ற புவியியலாளர் எம்.எஸ். கிருஷ்ணன் பெயரை சூட்டியுள்ளனர். பெரியார் பள்ளத்தாக்கு (Periyar Vallis): கேரளாவின் மிக நீளமான நதியான பெரியார் நதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தும்பா பள்ளம்: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) பிறப்பிடமான தும்பாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வர்கலா பள்ளம்: கேரளாவின் பிரபலமான வர்களை கடற்கரைப் பகுதியை போல செவ்வாய் கிரகத்தின் புவியியல் பாறைகளை கொண்ட இடம். பேகால் மலை: வரலாற்றுச் சிறப்புமிக்க பேகால் கோட்டையை குறிக்கும் பெயர். வளியமலை பள்ளம்: இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIST) அமைந்துள்ள இடம் வளியமலை.