புதிய கருந்துளை ஒன்றைக் கண்டறிந்து "சாதனை" படைத்த ஹபுள் தொலைநோக்கி!
செய்தி முன்னோட்டம்
விண்வெளியில் நடுத்தர அளவுடைய கருந்துளை ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 6000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் குளோபுலார் நட்சத்திரக் கொத்தின் நடுவில் அமைந்திருக்கிறது இந்தப் கருந்துளை.
கருந்துளைகள் அவை கொண்டிருக்கும் நிறையை வைத்து மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. ஸ்டெல்லார் மாஸ், சூப்பர்மேஸிவ் மற்றும் இன்ட்மீடியேட்-மாஸ்.
இதில் ஸ்டெல்லார் மாஸ் எனப்படுபவை அளவில் சிறிய கருந்துளைகள், நமது சூரியனை விட அதிக நிறையைக் கொண்ட நட்சத்திரங்கள் தங்கள் அந்திம காலத்தில் கருந்துளையாக மாறும்போது இந்த வகையான கருந்துளையாக மாறும்.
சூப்பர்மேஸிவ் கருந்துளைகள் இருப்பதிலேயே அளவில் மிகப்பெரியவையாக இருக்கும். அவை அளவில் சூரியனை விட மில்லியன் அல்லது பில்லியன் மடங்கு பெரிதாக இருக்கும்.
மூன்றாவது வகையான நடுத்தர அளவுடைய கருந்துளையானது 100-100,000 சூரியநிறையைக் கொண்டிருப்பவை.
கருந்துளை
ஹபுள் தொலைநோக்கியின் புதிய சாதனை:
சிறிய மற்றும் பெரிய கருந்துளைகள் இதுவரை அதிக அளவில் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆனால், நடுத்தர அளவுடைய கருந்துளைகளைக் கண்டறிவது மிகவும் அரிது. இதற்கு முன்னர் 2020-லும், 2009-லும் மட்டுமே நடுத்தர அளவுடைய கருந்துளைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
தற்போது கண்டறியப்பட்டிருக்கும் இந்தக் கருந்துளையானது குளோபுலார் நட்சத்திரக் கொத்தின் மையப் பகுதியான மெஸ்ஸியர் 4-ல் (M4) அமைந்திருக்கிறது.
இந்தக் கருந்துளையானது 800 சூரியநிறையைக் கொண்டிருக்கலாம் எனக் கணித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். நாசாவின் ஹபுள் தொலைநோக்கியைக் கொண்டே இந்தப் புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர்.
தற்போது கண்டறியப்பட்டிருக்கும் பிரபஞ்ச பொருளானது கருந்துளையாக இருப்பதைத் தவிர வேறு சாத்தியக்கூறுகள் இல்லை. அப்படி அது கருந்துளையாக இல்லாத பட்சத்தில் அது இதுவரை மனிதன் கண்டறிந்த பிரபஞ்ச கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.