'IC 5332' விண்மீன் மண்டலத்தை துல்லியமாகப் படம்பிடித்த ஹபுள் தொலைநோக்கி
விண்வெளியில் பூமியிலிருந்து 30 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள IC 5332 எனப் பெயரிடப்பட்டுள்ள விண்மீன் மண்டலத்தை (Galaxy) துல்லியமாகப் படம்பிடித்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி. பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் பல லட்சம் நட்சத்திர மண்டலங்களை இதுவரை பலமுறை ஹபுள் படம்பிடித்திருக்கிறது. அந்த வரிசையில் மற்றொரு விண்மீன் மண்டலமாக இணைகிறது IC 5332. சுழல் வடிவ விண்மீன் மண்டலமான இந்த IC 5332-வை ஆய்வு செய்வதன் மூலம், இது போன்ற சுழல் வடிவ விண்மீன் மண்டலங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி வளர்ச்சியடைகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், விண்மீன் மண்டலங்களைக் குறித்து தெரிந்து கொள்வது, நமது விண்மீன் மண்டலத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளவும் உதவும்.
IC 5332 வீண்மீன் மண்டலம்:
தற்போது ஹபுள் படம்பிடித்திருக்கும் இந்த விண்மீன் மண்டலத்தை 1897ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த லீவிஸ் ஸ்விப்ட் என்ற விண்வெளி ஆய்வாளரே கண்டுபிடித்தார். விண்வெளியில் 66,000 ஒளியாண்டுகள் தொலைவிற்கு பரந்து விரிந்திருக்கும் இந்த விண்மீன் மண்டலமானது, அளவில் நமது பால்வெளி மண்டலத்தை விட மூன்றில் ஒரு பங்கு சிறியது. இந்த IC 5332 விண்மீன் மண்டலத்தை 'SABc' வகை விண்மீன் மண்டலமாக வகைப்படுத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். டீ வாக்குலர் விண்மீன் மண்டல வகைப்படுத்தல் முறையின் கீழ் மேற்கூறிய வகையாக IC 5332 வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு விண்மீன் மண்டலம் எந்த வடிவில் இருக்கிறது, எவ்வித இணைப்பால் பின்னப்பட்டிருக்கிறது, அந்த இணைப்பு எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் விண்மீன் மண்டலங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.