நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்?
நேற்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தறையிறங்கிய சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரில் இருந்து, இன்று காலை பிரஞ்யான் ரோவரும் தரையிறக்கப்பட்டது. இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணங்களின் உதவியுடன் அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. பூமியின் கணக்கில் 14 நாட்கள் என்பது நிலவின் கணக்கில் ஒரு நாள் ஆகும். நிலவின் கணக்குப் படி, நேற்று மாலை நிலவில் சூரிய உதயத்தின் போது சந்திரயான் 3 தரையிறங்கியிருக்கிறது. பகல் நேரத்தில் நிலவின் தென்துருவப்பகுதியில் குறைவாகவே இருக்கும். ஆனால், 14 நாட்களுக்குப் பிறகு, நிலவின் ஒரு நாள் முடிவடைந்து இரவு தொடங்கிய பிறகு, கடும் குளிரும் தென்துருவப் பகுதியில் பரவத் தொடங்கும்.
14 நாட்களுக்குப் பிறகு?
சூரியன் இல்லாத கடும் குளிரான சமயத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் இயங்க முடியாது. மேலும், அதிகபட்ச குளிரால் அறிவியல் உபகரணங்களும் சேதாரமாகலாம். எனவே, தான் 14 நாட்களுக்குச் செயல்படும் வகையில் சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் மேற்கொள்ளும் அறிவியல் பரிசோதனை குறித்த தகவல்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும், சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் ப்ரொபல்ஷன் மாடியூல் வழியாக பூமியை வந்தடையும். தற்போது அனுப்பப்பட்டிருக்கும் லேண்டர் மற்றும் ரோவர் அமைப்புகளானது பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. ஆனால், அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் சந்திரயான் திட்டங்களில், நிலவின் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் திட்டங்களை இஸ்ரோ வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.