Loading...
பிளானட் 9 கிடையாது; நெப்டியூனுக்கு அப்பால் மறைந்திருக்கும் புதிய கோள் பிளானட் எக்ஸ்2 கண்டுபிடிப்பு
நெப்டியூனுக்கு அப்பால் மறைந்திருக்கும் புதிய கோள் பிளானட் எக்ஸ்2 கண்டுபிடிப்பு

பிளானட் 9 கிடையாது; நெப்டியூனுக்கு அப்பால் மறைந்திருக்கும் புதிய கோள் பிளானட் எக்ஸ்2 கண்டுபிடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2026
05:08 pm

செய்தி முன்னோட்டம்

நெப்டியூன் கோளுக்கு அப்பால் சூரியனிடமிருந்து நூற்றுக்கணக்கான வானியல் அலகுகள் தொலைவில் பிளானட் எக்ஸ்2 என்ற புதிய கோள் மறைந்திருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வானியலாளர்கள் தேடி வரும் பிளானட் 9 கோளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது என புதிய ஆய்வு கூறுகிறது. ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டியின் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி புதிய கோள் பூமியை விட 1.5 முதல் இரண்டு மடங்கு நிறை கொண்டதாகும். நெப்டியூனுக்கு அப்பாற்பட்ட வான்பொருட்களில் காணப்படும் விசித்திரமான ஈர்ப்பு விசைக்கு இந்தக் கோளே காரணமாக இருக்கக்கூடும்.

ஆய்வு

செட்னா போன்ற பனிப் பொருட்களின் விசித்திர சுற்றுப்பாதைகளும் 4.5 பில்லியன் ஆண்டு ஆய்வும்

நெப்டியூனுக்கு அப்பால் உள்ள செட்னா போன்ற பனிப் பொருட்கள் மிகவும் நீண்ட மற்றும் சாய்ந்த சுற்றுப்பாதைகளில் பயணித்து வருகின்றன.

இந்த அசாதாரணப் பாதைகளுக்கு இதுவரை தெளிவான அறிவியல் விளக்கம் கிடைக்காத நிலையில் ஒரு மர்மக் கோளின் ஈர்ப்பு விசையே காரணம் என விஞ்ஞானிகள் கருதினர்.

இதற்காக சூரியக் குடும்பத்தின் 4.5 பில்லியன் ஆண்டு கால வரலாற்றை விஞ்ஞானிகள் நவீனக் கணினி உருவகப்படுத்துதல் மூலம் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் பிளானட் 9-ஐ விட சிறியதான பிளானட் எக்ஸ்2 கோளே நமது ஒன்பதாவது கோளாக இருக்க அதிக வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

பிளானட் எக்ஸ்2 மாதிரி

பிளானட் 9-ஐ விட துல்லியமான விளக்கம் அளிக்கும் பிளானட் எக்ஸ்2 மாதிரி

புதிதாகக் கணிக்கப்பட்டுள்ள பிளானட் எக்ஸ்2 கோள் சூரியனிடமிருந்து நூற்றுக்கணக்கான வானியல் அலகுகள் தொலைவில் மிகவும் நீளமான சுற்றுப்பாதையில் பயணிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

அதன் வலுவான ஈர்ப்பு விசை தொலைதூரத்தில் சுற்றி வரும் மற்ற பனிப் பொருட்களின் இயக்கத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

தொலைதூர வான்பொருட்களின் விசித்திரமான சுற்றுப்பாதை முரண்பாடுகளைப் பிளானட் 9-ஐ விடத் தங்களது புதிய மாதிரி சிறப்பாக விளக்குவதாக ஜப்பான் விஞ்ஞானி டாக்டர் பாட்ரிக் சோபியா லைகாவ்கா கூறியுள்ளார்.

இருப்பினும் கணினி மாதிரிக்கும் நேரடி அவதானிப்புகளுக்கும் இடையே உள்ள சில வேறுபாடுகளை மேலும் ஆராய வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

குள்ளக்கோள்

அக்டோபர் 2026-ல் ரூபின் ஆய்வகம் கண்டறிந்த '2026 ED138' குள்ளக்கோள்

சிலி நாட்டில் உள்ள ரூபின் ஆய்வகம் கடந்த அக்டோபர் மாதம் கண்டறிந்த 2026 ED138 என்ற குள்ளக்கோள் பிளானட் எக்ஸ்2 கோளாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.

அறுநூறு முதல் ஆயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்த வான்பொருள் சூரியனிடமிருந்து சுமார் 46 வானியல் அலகுகள் தொலைவில் சுற்றி வருகிறது.

நாம் நீண்ட காலமாகத் தேடி வந்த மர்மக் கோள் இதுதானா என்பதை உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் தரவுகளும் ஆய்வுகளும் தேவைப்படுகின்றன.

வரவிருக்கும் நவீனத் தொலைநோக்கிகள் மூலம் 2026 ED138 மற்றும் பிளானட் எக்ஸ்2 குறித்த மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ADVERTISEMENT