உள்நாட்டு கிரிட்டிகல் கனிமங்கள் மறுசுழற்சியை அதிகரிக்க ₹1,500 கோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்தியா
செய்தி முன்னோட்டம்
உள்நாட்டு மின் கழிவுப் பதப்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய கிரிட்டிகல் கனிமங்களின் (Critical Minerals) மீட்சிக்கான திறனை விரைவாக விரிவாக்க, மத்திய அரசு தனியார் துறையை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறது. கடந்த மாதம் ₹1,500 கோடி (சுமார் $180 மில்லியன்) மதிப்பிலான ஊக்கத்தொகைத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தேசிய கிரிட்டிகல் மினரல்ஸ் மிஷனின் ஒரு முக்கிய அம்சமாகும். இதன் முதன்மை நோக்கம், முக்கியக் கனிமங்களுக்கான நம்பகமான மற்றும் நிலையான உள்நாட்டு விநியோகச் சங்கிலியை நிறுவுவதாகும். சுரங்க அமைச்சகம் (Ministry of Mines), சமபந்தப்பட்ட தொழில்துறையினருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்த மாத தொடக்கத்திலேயே திட்டத்திற்கான விரிவான வழிகாட்டுதல்களை விரைவாக வெளியிட்டது.
வரவேற்பு
தொழில்துறை வரவேற்பு
இத்திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறை அக்டோபர் 2, 2025 அன்று தொடங்கப்பட்டது. இந்த வேகமான தொடக்கம், தொழில்துறையிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுக்கு அவசியமான பல்வேறு மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் மின் கழிவுகள் (E-waste), பயன்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகள் (LIBs) மற்றும் காலாவதியான வாகனங்களில் உள்ள கேட்டலெடிக் கன்வெர்ட்டர்கள் போன்ற பிற ஸ்கிராப் பொருட்கள் ஆகியவை அடங்கும். திறமையான மீட்பை உறுதி செய்வதற்காக, ஹைட்ரோமெட்டலர்ஜி போன்ற மேம்பட்ட செயல்முறைகளைப் பயன்படுத்தி மறுசுழற்சி திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஐஐடிகள் மற்றும் சிஎஸ்ஐஆர் போன்ற முன்னணி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட, முழுமையான மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன.