கூகுளின் விருப்ப ஓய்வு திட்டத்தில் யார் யாருக்கு என்னென்ன பலன்கள்? முழு இழப்பீட்டுத் தொகை விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மேம்பாடுகளுக்காக செய்யப்படும் அதிகப்படியான முதலீட்டு செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு சலுகைத் திட்டத்தை 7 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், தற்போது சுவிட்சர்லாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கை சர்வதேச தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச பணிநீக்க இழப்பீட்டுத் தொகை
சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மாத அடிப்படை சம்பளம் வீதம் இழப்பீடாக வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பணிநீக்க நிவாரணத் தொகையானது அதிகபட்சமாக 12 மாத சம்பளம் வரை வரம்பிடப்பட்டுள்ளது.
அதாவது 12 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஒரு முழு ஆண்டின் சம்பளம் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
பிற நான்கு நாடுகளில் வழங்கப்படும் சலுகை விவரங்கள் குறித்துக் கூகுள் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
தகுதியான குழுக்கள்
ஏஐ பிரிவுகளுக்கு விலக்கு மற்றும் தகுதியான குழுக்களின் விவரங்கள்
கூகுளின் இந்த புதிய விருப்ப ஓய்வுத் திட்டமானது அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் பொருந்தாது.
நிறுவனத்தின் முதன்மை இலக்கான ஏஐ கருவிகளை ஒருங்கிணைக்கும் பணி நடைபெறுவதால், கூகுள் கிளவுட் மற்றும் டீப்மைண்ட் ஆகிய அதிமுக்கியப் பிரிவுகளுக்கு இந்த சலுகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாறாக தேடுதல் பொறி (Search), சந்தைப்படுத்தல், விளம்பரம் மற்றும் குளோபல் பிசினஸ் ஆர்கனைசேஷன் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களுக்கு இந்த சலுகை ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.
செலவினங்கள்
செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட்
செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிலவும் கடும் போட்டியால் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்கு விலைகள் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன.
இதனால் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள நிதி வளங்களை முக்கியத் முன்னுரிமைப் பிரிவுகளுக்கு மாற்றும் நடவடிக்கையில் கூகுள் இறங்கியுள்ளது.
கூகுளைத் தொடர்ந்து மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்டும் தனது செலவினங்களைக் குறைப்பதற்காக 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு சலுகைகளை அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.