AI உதவியுடன் வாகன புகை மாசுபாட்டைக் குறைக்க உதவும் கூகுள்
நகரங்களில் வாகனப் புகையினால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'க்ரீன் லைட்' என்ற புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது கூகுள். நகரங்களில் சாலை சந்திப்புகளில் டிராபிக் சிக்னல்களால் காத்திருக்கும் வாகனங்கள் வெளியிடும் புகையிலானால் ஏற்படும் மாசுபாட்டைத் தவிர்க்க புதிய வழிமுறையை அளிக்கிறது கூகுள். சாலை சந்திப்புகளில், டிராபிக் சிக்னல்களில் குறைவான நேரம் மட்டும் வாகனங்கள் காத்திருக்க நேர்ந்தால், அவை வெளியிடும் புகையின் அளவும் குறையுமல்லவா. எனவே, ஒரு நகரின் சாலை சந்திப்புகளில் கூடும் வாகனங்கள், அந்நகரின் வாகனப் போக்குவரத்து மற்றும் டிராபிக் சிக்னல்கள் இயங்கும் முறை ஆகிய தகவல்களை கொண்டு செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் குறைவான நேரம் மட்டுமே டிராபிக் சிக்னல்களில் வாகனம் நிற்கும் வகையில் மேம்படுத்தியிருக்கிறது கூகுள்.
இந்தியா நகரங்களிலும் அமல்படுத்தப்பட்ட திட்டம்:
இந்த வழிமுறையை இந்தியாவின் பெங்களூரூ, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா உட்பட உலகின் 12 நகரங்களில் தற்போது அமல்படுத்தியிருக்கிறது கூகுள். இந்த வழிமுறையை ஒரு சாலை சந்திப்பில் அமல்படுத்த வெறும் 5 நிமிடங்கள் போதுமாம். மேலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் டிராபிக் சிக்னல் கட்டமைப்பிலேயே இந்த வழிமுறையை அமல்படுத்த முடியும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள். மேலும், ஏற்கனவே இந்த 'க்ரீன் லைட்' வழிமுறை அமல்படுத்தப்ட்ட நகரங்களில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், டிராபிக் சிக்னல்களில் தேவையில்லாமல் வாகனங்கள் நிற்பது 30% வரை குறைந்து, அதனால் வெளியேறும் புகையின் அளவும் சாலை சந்திப்புகளில் 10% வரை குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.