டிசம்பர் 1 தொடங்கி பயன்பாடற்ற கணக்குகளை நீக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகள் மற்றும் அக்கணக்குகள் சார்ந்த தகவல்களை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்கிவிருக்கிறது கூகுள். இது குறித்த அறிவிப்பை இந்த ஆண்டு மே மாதமே அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. 2023 டிசம்பர் 1ம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள் அழிக்கப்படவிருக்கிறன. அப்படி நீக்கப்படவிருக்கும் கூகுள் கணக்கு குறித்த அறிவிப்பை குறிப்பிட்ட கூகுள் கணக்கின் மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் மீட்பு மின்னஞ்சல் முகவரிக்கும் முதலில் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். அப்படி அறிவிப்பு செய்தும் குறிப்பிட்ட கணக்கில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்திலேயே, அந்த கூகுள் கணக்கு மற்றும் அதுகுறித்த தகவல்கள் நீக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
கூகுள் கணக்கு நீக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்து. வேலை சார்ந்து பயன்படுத்தப்படும் கணக்குகளுக்குப் பொருந்தாது எனவும் தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஒரு குறிப்பிட்ட கணக்கில் இருந்து மின்னஞ்சல்கள் அனுப்பப்படாமல் அல்லது படிக்கப்படாமல் இருப்பது, அந்தக் கணக்கின் கூகுள் டிரைவைப் பயன்படுத்தாமல் இருப்பது, அந்தக் கணக்கிலிருந்து யூடியூப் காணொளிகளைப் பார்க்காமல் இருப்பது, புதிய செயலியை தரவிறக்கம் செய்யாதது மற்றும் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தாமல் இருப்பது இப்படி எந்த விதமான செயல்பாடுகளும் இல்லையென்றால் மட்டுமே அந்தக் கணக்கு பயன்பாடற்ற கணக்காக கருதப்படும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேற்கூறிய ஏதேனும் ஒரு நடவடிக்கை இருந்தாலும் அது பயன்பாடற்ற கணக்காகக் கருதப்படமாட்டாது எனத் தெரிவித்திருக்கிறது கூகுள்.