இந்தியாவில் வெளியானது கூகுளின் புதிய 'பிக்சல் 8 சீரிஸ்' ஸ்மார்ட்போன்கள்
புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சை வெளியிடும் தங்களுடைய வருடாந்திர நிகழ்வான 'மேடு பை கூகுள்' நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறது கூகுள். இன்றைய (அக்டோபர் 4) நிகழ்வில் பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் வாட்ச் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆகிய கேட்ஜட்களை வெளியிட்டிருக்கிறது கூகுள். இன்று கூகுள் வெளியிட்ட கேட்ஜட்ஸ்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், இன்றைக்கு வெளியிடப்பட்ட சாதனங்கள் அனைத்திலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதியையும் பயன்படுத்தியிருக்கிறது கூகுள். வன்பொருள், மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அனைத்து கலந்து கலவையாக புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.
கூகுள் பிக்சல் 8:
பிக்சல் 7ஐ விட 0.1 இன்ச் சிறிய 6.2 இன்ச் டிஸ்பிளேவை பிக்சல் 8 மாடலில் அளித்திருக்கிறது கூகுள். மேலும், இந்தப் புதிய மாடலில் புதிய வகை ஆக்சுவா டிஸ்பிளேவை பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். 120Hz ரெப்ரெஷ் பேட், 2000 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸைக் கொண்டிருக்கிறது இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே. புதிய பிக்சல் 8ன் பேட்டரி அளவையும் 5% அதிகமாக, 4,485mAh ஆக உயர்த்தியிருக்கிறது கூகுள். இந்த பேட்டரியுடன், 24 மணி நேரத்திற்கும் மேலான பேட்டரி பேக்கப்பை பெற முடியும் எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். இத்துடன் 30W வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.
கூகுள் பிக்சல் 8 ப்ரோ:
புதிய பிக்சல் 8 சீரிஸின் கீழ், 6.7 இன்ச் என்ற அளவில் பெரிய திரையைக் கொண்ட புதிய பிக்சல் 8 ப்ரோ மாடலையும் இன்றைய நிகழ்வில் வெளியிட்டது கூகுள். இந்த 8 ப்ரோவில் சூப்பர் ஆக்சுவா டிஸ்பிளேவை பயன்படுத்தியிருக்கிறது கூகுள். பிக்சல் 8ல் 50MP முதன்மைக் கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு கேமரா பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பிக்சல் 8 ப்ரோவில் 50MP முதன்மைக் கேமரா, 48MP மேக்ரோ மற்றும் 48MP டெலிபோட்டோ கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே கூகுளின் புதிய டென்சார் G3 சிப்பே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளையும் அளித்திருக்கிறது கூகுள்.
கூகுள் பிக்சல் வாட்ச் 2:
புதிய ப்ராசஸர், அப்டேட் செய்யப்பட்ட சாஃப்ட்வேர் மற்றும் மூன்று புதிய சென்சார்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய பிக்சல் வாட்ச் 2வை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். ஸ்கின் டெம்பரேச்சர் சென்சார், எலெக்ட்ரோடெர்மல் சென்சார் மற்றும் கூடுதல் இதயத் துடிப்பு சென்சார்களையும் புதிய வாட்ச் 2வில் அளித்திருக்கிறது கூகுள். இந்தப் புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் குவால்காம் ஸ்னாப்டிராகன் W5 சிப்பைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே வசதியுடன் 24 மணி நேரம் வரையிலான பயன்பாட்டை வழங்குகிறது இந்தப் புதிய ஸ்மார்ட்வாட்ச். வியர் ஓஎஸ் 4 இயங்குதளத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வாட்ச் 2வை வைபை மற்றும் இசிம் கொண்டு பயன்படுத்தும் வகையிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.
கூகுளின் புதிய சாதனங்களின் விலைகள்:
இந்தப் புதிய சாதனங்களை இந்தியாவிலும், ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் இன்றே முன்பதிவு செய்யலாம். இந்த சாதனங்களின் ஷிப்பிங்குகள் அக்டோபர் 12ம் தேதி தொடங்கும் என அறிவித்திருக்கிறது கூகுள். 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுளின் புதிய பிக்சல் 8 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.75,999 விலையில் வெளியாகியிருக்கிறது. 12GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுளின் புதிய பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.1,06,999 விலையில் வெளியாகியிருக்கிறது. கூகுளின் புதிய பிக்சல் வாட்ஸ் 2வானது இந்தியாவில் ரூ.39,900 விலையில் வெளியாகியிருக்கிறது. வெளியான சில மணி நேரத்திலேயே இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்றுத் தீர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.