வங்கி கணக்கு இல்லையென்றாலும் பணம் அனுப்ப முடியும்; கூகுள் பே-வின் புதிய பாக்கெட் மணி வசதி
செய்தி முன்னோட்டம்
கூகுள் பே நிறுவனம் தனது பயனர்களுக்காக 'யுபிஐ சர்க்கிள்' என்ற புதிய வசதியின் கீழ் 'பாக்கெட் மணி' (Pocket Money) என்ற சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வங்கிச் கணக்கு இல்லாத உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள், உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியில், கூகுள் பே கணக்கு வைத்திருக்கும் நீங்கள் 'Primary User' ஆவீர்கள். நீங்கள் சேர்க்கும் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் 'Secondary Users' என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்கு தேவையான கட்டணங்களை உங்கள் கணக்கில் இருந்து செலுத்த முடியும்.
கட்டுப்பாடு
கட்டுப்பாட்டு முறைகள்
இரண்டாம் நிலை பயனர்களின் செலவுகளை கட்டுப்படுத்த இரண்டு வழிமுறைகளை கூகுள் பே வழங்குகிறது: 1. முழு அதிகாரம்: இதில் நீங்கள் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ. 15,000 வரை வரம்பு நிர்ணயிக்கலாம். அந்த வரம்பிற்குள் இரண்டாம் நிலை பயனர் உங்கள் அனுமதியின்றி நேரடியாகப் பணம் செலுத்த முடியும். 2. பகுதி அதிகாரம்: இதில் இரண்டாம் நிலை பயனர் செய்யும் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் (Transaction) முதன்மை பயனரான உங்கள் அனுமதி அவசியமாகும். அவர்கள் பணம் செலுத்தும் முன் உங்களுக்கு ஒரு கோரிக்கை (Request) வரும், நீங்கள் அனுமதித்த பின்னரே பணம் செலுத்தப்படும்.
தகுதிகள்
இதற்கான தகுதிகள் என்ன?
முதன்மை பயனராக இருப்பதற்கு கூகுள் பே-வில் செயலில் உள்ள ஒரு வங்கிச் கணக்கு இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 இரண்டாம் நிலை பயனர்களை உங்கள் யுபிஐ சர்க்கிளில் சேர்க்க முடியும். இரண்டாம் நிலை பயனரின் மொபைல் எண் உங்கள் போனில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் கூகுள் பே செயலியைத் தங்கள் மொபைல் எண்ணில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வழிமுறை
பாக்கெட் மணி அமைக்கும் முறை
1.கூகுள் பே செயலியில் UPI Circle என்ற பகுதிக்குச் செல்லவும். 2.நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் பெயர் அல்லது போன் எண்ணைத் தேடித் தேர்ந்தெடுக்கவும். 3.அவர்களின் UPI QR Code-டை ஸ்கேன் செய்து, 'Approve every payment' அல்லது 'Set a monthly limit' ஆகிய விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவும். 4. மாதாந்திர வரம்பை தேர்வு செய்தால், குறிப்பிட்ட தொகையை நிர்ணயிக்கவும். 5. உறவுமுறை மற்றும் அடையாள அட்டை போன்ற விவரங்களை சேர்த்து, உங்கள் வங்கி கணக்கை தேர்ந்தெடுக்கவும். 6. இறுதியாக உங்கள் UPI PIN எண்ணை உள்ளிட்டு Invite அனுப்பவும். குழந்தைகளுக்கு பாக்கெட் மணி வழங்கவும், சார்ந்துள்ளவர்களுக்குப் பண உதவி செய்யவும் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.