
ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்
செய்தி முன்னோட்டம்
ஆபத்து சமயங்களில் செயற்கைக்கோள் உதவியுடன் எச்சரிக்கைக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் கொடுக்கவிருக்கிறது கூகுள். இந்த வசதியை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஏற்கனவே இருக்கும் கூகுள் மெஸேஜஸ் வசதியுடன் இணைத்தே அளிக்கவிருக்கிறது கூகுள்.
இந்த வசதியைப் பயன்படுத்தி குறுஞ்செய்தியை அனுப்புவது மட்டுமல்லாமல், ஒருவர் இருக்கும் இடம் குறித்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முடியுமாம். எனவே, ஆபத்துக் காலங்களில் இந்த வசதி மிகவும் உபயோகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் செயலிகளால் இந்த வசதியைப் பயன்படுத்த முடியாது எனவும், இந்த வசதி குறித்து ட்விட்டரில் ஆண்ட்ராய்டு நிபுணர் ஒருவர் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
கூகுள்
அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியுமா?
இன்னும் சில வாரங்களில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை பயனாளர்களுக்கு வெளியிடவிருக்கிறது கூகுள். எனவே, அனைத்து பயனாளர்களாலும் இந்தப் புதிய செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியைப் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டால், முடியாது.
இந்த வசதியைப் பயன்படுத்த சாஃப்ட்வேர் மட்டுமல்லாது, இதற்கு தேவையான ஹார்டுவேரும் ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதற்கு முன்னர் வெளியான ஸ்மார்ட்போன்களில் அந்த ஹார்டுவேர் பொருத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அடுத்து வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் இந்தப் புதிய ஹார்டுவேருடன் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வசதியை கூகுள் முன்பிருந்தே திட்டமிட்டு வருவதால், கூகுளின் பிக்சல் 7 மற்றும் அதற்கு பின் வெளியான மாடல்களில் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சாட்டிலைட் வழி குறுஞ்செய்தி வசதி குறித்த எக்ஸ் பதிவு:
Looks like Google Messages is indeed preparing to add support for Satellite Connectivity. They've added UIs for conversations and SOS messages using satellite connection: pic.twitter.com/IDxse7QNCw
— Neïl Rahmouni 🐢 (@neil_rahmouni) August 17, 2023