விமானப் பயணங்களின் போது பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை உருவாக்கி வரும் கூகுள்
விமானப் பயணங்களின் போது வைபை மற்றும் ப்ளூடூத்தை பயன்படுத்தும் வகையிலான 'கனெக்டட் ஃபிளைட்' (Connected Flight) என்ற புதிய வசதியை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்காக கூகுள் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது விமானப் பயணங்களின் போது நமது மொபைல்களில் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் வராமல் தடுப்பதற்கு ஏர்பிளேன் மோடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த ஏர்பிளேன் மோடில் செல்லுலார் நெட்வொர்க் மட்டுமின்றி வைபை, ப்ளூடூத் ஆகிய வசதிகளையும் பயனர்களால் பயன்படுத்த முடியாது. எனவே, விமானப் பயணங்களின் போது செல்லுலார் நெட்வொர்க்கை மட்டும் தடுக்கும் வகையிலான கனெக்டட் பிளைட் வசதியை உருவாக்கி வருகிறது கூகுள்.
இந்தப் புதிய வசதியினால் என்ன பயன்?
இந்த வசதியானது, கேபின் சத்தம், அல்ட்ராசானிக் சிக்னல், ஜிபிஎஸ் சிக்னல் மற்றும் செல்லுலார் ஐடி ஆகியவற்றைக் கொண்டு நாம் விமானப் பயணத்தில் இருக்கிறோமா எனத் தானாகவே கண்டறிந்து கனெக்டட் பிளைட் வசதியை ஆன் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் பின்பு செல்லுலார் நெட்வொர்க் தேவைப்படும் வசதிகளை நாம் பயன்படுத்த முடியாது. ஆனால், ப்ளூடூத் மற்றும் வைபையைக் கொண்டு பயன்படுத்தும் செயலிகளை விமானப் பயணங்களின் போது நம்மால் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதராணத்திற்கு பாடல்கள் மற்றும் வீடியோக்கள் ஸ்ட்ரீம் செய்வது, குறுஞ்செய்தி செயலிகள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்புவது உள்ளிட்ட செயல்களை நம்மால் மேற்கொள்ள முடியும். விமானப் போக்குவரத்துத்துறையின் விதிமுறைகளுக்குக் உட்பட்டே இந்த புதிய வசதி உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறது கூகுள்.