AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை இந்தியாவிற்கும் விரிவுபடுத்திய கூகுள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மற்றும் கருவிகளுடன் கூடிய தேபொறி வசதியை முதல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது கூகுள். அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்த வசதியை விரிவாக்கம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஜப்பானில் அந்நாட்டு மொழியிலும், இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய கூகுள் தேடுபொறி வசதியை நாம் பயன்படுத்த முடியும். கூகுள் சர்ச் லேப்ஸ் (இங்கே கிளிக் செய்யவும்) தளத்திற்குச் சென்று, செயற்கை நுண்ணறிவுத் தேடுபொறி வசதியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை நாம் அளித்த பின்பு, அந்த வசதியை வழக்கமாகக் கூகுளைப் பயன்படுத்தும் போதே நம்மால் பயன்படுத்த முடியும்.
இந்தப் புதிய வசதியினால் பயனாளர்களுக்கு என்ன பயன்?
சாதாரணமாக கூகுளில் ஒரு விஷயத்தை நாம் தேடும் போது, பல்வேறு தளங்களில் கிடைக்கும் தகவல்களைத் திரட்டி அதனை நாம் ஒன்று சேர்க்க வேண்டியிருக்கும். மேலும், இதற்கிடையில் போலியான அல்லது தவறான தகவல்களும் நமக்குக் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த AI கருவியானது, நம்முடைய தேடலுக்குத் தொடர்பான முக்கியமான தகவல்களை மட்டும் திரட்டி அதனை, தேடலின் முதற்பக்கத்திலேயே நமக்கு வழங்குகிறது. அதனைக் கடந்து மேலதிக தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில், மிகவும் நம்பகமான தளங்களை மட்டும் கூடுதலாக தேடிக் கொடுக்கிறது. இதன் மூலம், நம்முடைய பெரும்பாலான நேரத்தையும் வேலையையும் மிச்சம் செய்து கொடுக்கிறது இந்த AI தொழில்நுட்பம். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா மற்றும் ஜப்பானில் மட்டும் இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.