அழகான டூடிலுடன் தனது வெள்ளிவிழாவை கொண்டாடும் கூகிள்
அனைவரின் விருப்பமான தேடுபொறியான கூகுள், இன்று அதன் 25 வயதை நிறைவு செய்து, தனது பிறந்தநாளை, அழகான டூடுலுடன் கொண்டாடுகிறது. "நினைவக பாதையில் நடக்க" என்ற அடிப்படையில், கூகிள், தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வெளியான டூடல்களை காட்சிப்படுத்தியது. இந்த வரிசையில் இறுதியாக, இன்றைய டூடலின் GIF இணைக்கப்பட்டு, இது 'Google' ஐ 'G25gle' ஆக மாற்றுகிறது. "இன்றைய டூடுல் கூகுளின் 25வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இங்கே கூகுளில் இருக்கும் போது, நாங்கள் எதிர்காலத்தை முன்னோக்குபவர்களாக இருக்கிறோம். எனினும் பிறந்தநாளின் போது, நாம் பின்னோக்கி பார்க்கும் ஒரு தருணம். 25 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்படி பிறந்தோம் என்பதை அறிய நினைவக பாதையில் நடந்து செல்லலாம், "என்று அந்நிறுவனம் தனது வலைப்பதிவில் எழுதியுள்ளது.
கூகிளின் வரலாறு
90களின் பிற்பகுதியில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் கூகுள் நிறுவப்பட்டது. கூகுள், செப்டம்பர் 4, 1998இல் நிறுவப்பட்டது, செப்டம்பர் 27, 1998இல் கூகுள் இன்க் அதிகாரப்பூர்வமாக பதியப்பட்டது. ஆரம்பத்தில், இந்த நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்ட நாளான செப்டம்பர் 4 -ஐ பிறந்தநாளான கொண்டாடி வந்தது. ஆனால் 7 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கத்தை மாற்றி, செப்டம்பர் 27 , கூகிளின் பிறந்தநாளாக அறிவிக்கப்பட்டது. கூகிளின் தற்போதைய CEO, சுந்தர் பிச்சை ஒரு வலைப்பதிவில்,"இந்த மாதம், கூகுள் 25வது பிறந்தநாளைக் கொண்டாடும். இந்த மைல்கல்லை எட்டுவது மிகப்பெரிய பாக்கியம். அந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்கு தங்கள் திறமைகளை வழங்கிய நூறாயிரக்கணக்கான கூகிளர்கள் அனைவருக்கும் நன்றி", என்று கூறினார்.