வானில் ஒரு அதிசயம்! பிப்ரவரி 1 அன்று தோன்றப்போகும் 'ஸ்னோ மூன்'! எந்த நேரத்தில் பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாத பௌர்ணமி நிலவு, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வானில் தோன்ற உள்ளது. இதை 'ஸ்னோ மூன்' (Snow Moon) என்று அழைக்கிறார்கள். இது ஒரு 'சூப்பர் மூன்' கிடையாது என்றாலும், இந்த ஆண்டு தோன்றும் நிலவுகளில் இதுவே அதிக வெளிச்சம் கொண்டதாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நிலவின் ஒளியை பனிப்பொழிவு பிரதிபலிப்பதாலேயே இந்த அதீத வெளிச்சம் உண்டாகிறது. இந்த நிலவு பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை மாலை 5:09 மணிக்கு அதன் முழுமையான ஒளியை அடையும். இந்திய நேரப்படி, பிப்ரவரி 2, திங்கட்கிழமை அதிகாலை 3:39 மணிக்கு நிலவு அதன் உச்சகட்டப் பிரகாசத்துடன் காணப்படும்.
தேனீக்கூடு
தேனீக்கூடு நட்சத்திரக் கூட்டம்
பிப்ரவரி 1 அன்று மாலையிலிருந்தே நிலவின் அழகை ரசிக்கலாம். பௌர்ணமிக்கு ஒரு நாள் முன்னதாகவும், பின்னதாகவும் நிலவு முழுமையாகவே காட்சியளிக்கும். இந்த முறை ஸ்னோ மூன் தனித்துத் தெரியாமல், அதன் கீழே 'தேனீக்கூடு நட்சத்திரக் கூட்டம்' (Beehive Cluster) என்ற விண்மீன் திரளுடன் இணைந்து காட்சியளிக்கப் போகிறது. இது சுமார் 1,000 நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நெருக்கமான கூட்டமாகும். ஜெமினி (மிதுனம்) ராசியின் பிரகாசமான நட்சத்திரமான பொல்லக்ஸ் (Pollux) மற்றும் சிம்ம ராசியின் ரெகுலஸ் (Regulus) நட்சத்திரங்களுக்கு இடையே இந்த நிலவு காட்சியளிக்கும்.
நட்சத்திரம்
நிலவின் பின்னால் மறையப்போகும் நட்சத்திரம்
பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு ஒரு அபூர்வ நிகழ்வு நடக்க உள்ளது. நிலவு நகர்ந்து செல்லும்போது, சிம்ம ராசியின் முக்கிய நட்சத்திரமான ரெகுலஸ் (Regulus) நிலவின் பின்னால் தற்காலிகமாக மறைந்து மீண்டும் தோன்றும். இதற்கு 'லூனார் அக்கல்டேஷன்' (Lunar Occultation) என்று பெயர். இது மிகவும் அரிதான நிகழ்வு என்பதால், இதைத் தவறவிட்டால் மீண்டும் 2030களில் தான் பார்க்க முடியும். அமெரிக்காவின் பழைய விவசாயிகளின் பஞ்சாங்கத்தின்படி, பிப்ரவரி மாதத்தில் தான் அதிகப்படியான பனிப்பொழிவு ஏற்படும். பனி படர்ந்த இரவுகளில் தோன்றும் இந்த நிலவு, சூரிய ஒளியை 90 சதவீதத்திற்கும் மேலாகப் பிரதிபலிக்கும் பனியின் மீது பட்டு, இரவை பகல் போல வெளிச்சமாக்கும். இதனாலேயே இதற்கு 'ஸ்னோ மூன்' என்று பெயர் வந்தது.