FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல்
பெங்களூருவை சேர்ந்த பெண்ணின் FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து, ரூ.60 ஆயிரத்தை ஒரு மோசடி கும்பல் திருடியுள்ளது. டிசம்பர் 12ஆம் தேதி, பெங்களூரு பென்சன் டவுனில் வசிக்கும் 80 வயதான டாக்டர் மேரி ஜானின் Paytm கணக்கிலிருந்து, தெரியாத ஏதோ வாகனத்திற்கு FASTag ரீசார்ஜ் செய்யப்பட்டதாக, அவருடைய போனிற்கு மெசேஜ் வந்துள்ளது. உடனே FASTag நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணை ஆன்லைனில் தேடி, 01204456456 என்ற எண்ணைக் கண்டுபிடித்தார். குறிப்பிடப்பட்டிருந்த அந்த எண்ணிற்கு டயல் செய்தபோது, எதிர்முனையில் இருந்தவர், மேரியின் குறையைக்கேட்டு, அதை தீர்ப்பதாக உறுதியளித்தார். பின்னர் மேரியுடைய, Paytm ஐடி மற்றும் வங்கி கணக்கு விவரங்களைக் பெற்றுக்கொண்டார். மறுநாள், டாக்டர் மேரிக்கு பல ஸ்பேம் தொலைபேசி அழைப்புகள் வந்தன.
FASTag மோசடி
அன்று மதியம் 12:20 மணியளவில், அவரது கணக்கிலிருந்து ரூ.39,999 டெபிட் செய்யப்பட்டதாக செய்தி வந்தது. தொடர்ந்து, அடுத்தடுத்து, ஐந்து முறை ரூ.2,000 டெபிட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. மீண்டும் மதியம் 1:20 மணிக்கு, மூன்று பரிவர்த்தனைகள் நடந்தன (ரூ. 5,000, ரூ. 3,000 மற்றும் ரூ. 1,999). திடுக்கிட்ட மேரி, இது குறித்து விசாரிக்க வங்கிக்கு விரைந்தார். விசாரணையில், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார். மேலும், தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து, தஹமித் அன்சாரி மற்றும் புருஷோத்தமா B U பெயரில் உள்ள UPI கணக்குகளுக்கு பணபரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்தது. உடனே, டாக்டர் மேரி, ஜே.சி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஜே.சி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.