எலான் மஸ்க் மீது முன்னாள் ஊழியர்கள் வழக்கு!
ட்விட்டரின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை சட்ட அதிகாரி விஜயா காட்டே மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்டோர் ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் போது பங்குச்சந்தை விதிமுறைகள் எதுவும் மீறப்பட்டதா என்பது குறித்து மேற்கூறிய முன்னாள் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டது அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC). இந்த விசாரணைக்கான செலவுகளாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ட்விட்டர் நிறுவனம் தங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.
முன்னாள் ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தினார் எலான் மஸ்க். வாங்கிய மறுநாளே அதன் தலைமைப் பதவிகளில் இருந்தவர்களைப் பணிநீக்கம் செய்தார். மேற்கூறிய விசாரணைகள் தொடர்பாக ஆன செலவுகளை ட்விட்டர் நிறுவனம் தங்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், ட்விட்டர் நிறுவனம் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ட்விட்டர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். நிறுவனத்தை கையகப்படுத்தியவுடன், செலவுகளைக் குறைக்கும் பொருட்டு 75% பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தார். பல இடங்களில் ட்விட்டர் அலுவலகங்களில் வாடகையும் கொடுக்கப்படவில்லை எனக்குற்றச்சாட்டுகள் எழுந்தன. ட்விட்டரில் வெறுப்புப் பேச்சும், தவறான தகவல்களும் அதிகமாகப் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக ட்விட்டருக்கு வரும் விளம்பர வருவாயும் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.