நிலவில் ஒரு 'பேலஸ்' ஹோட்டல்! தங்குவதற்கு இப்போதே முன்பதிவு செய்யலாம்
செய்தி முன்னோட்டம்
மனிதகுலத்தின் விண்வெளி பயணக் கனவை நனவாக்கும் வகையில், நிலவின் மேற்பரப்பில் தொடர்ச்சியாகக் குடியிருப்புகளை அமைக்கும் திட்டத்தை 'GRU ஸ்பேஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற 'பேலஸ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்' கட்டிடத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நிலவில் ஒரு பிரம்மாண்ட ஹோட்டலை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் இறுதி இலக்காகும். இந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்கைலர் சான், விண்வெளிப் பயணத்தை அனைவருக்கும் சாத்தியமாக்கும் நோக்கில் இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
விவரங்கள்
நிலவின் மூல பொருட்களை கொண்டு கட்டுமானம்
'Galactic Resource Utilization' என்பதன் சுருக்கமான GRU ஸ்பேஸ், நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி மனித விரிவாக்கத்திற்கு வழிவகுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 2029-ஆம் ஆண்டில் நிலவுக்கு ஒரு சிறிய விண்கலத்தை அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் நிலவின் மண்ணைக் கொண்டு செங்கற்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் காற்றில் விரியும் (Inflatable) கட்டமைப்புகள் சோதிக்கப்பட உள்ளன.
ஹோட்டல்
2032 -இல் நிலவில் ஹோட்டல்?
தொடர்ந்து 2032-ஆம் ஆண்டில், நான்கு விருந்தினர்கள் தங்கும் வசதி கொண்ட முதல் ஹோட்டல் நிலவில் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் தற்போது 2.5 லட்சம் டாலர் முதல் 10 லட்சம் டாலர் வரை முன்பதிவுத் தொகையாக செலுத்தி தங்களின் இடத்தைப் பதிவு செய்யலாம். ஒய் காம்பினேட்டர் (Y Combinator) நிறுவனத்தின் முதலீட்டைப் பெற்றுள்ள இந்தத் திட்டம், விண்வெளிச் சுற்றுலாத் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நிலவின் மேற்பரப்பிற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் பயணங்களை உறுதி செய்ய உள்ளதாக இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.