உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ போக்குவரத்து விமானம்; செப்.2026க்குள் இந்திய விமானப்படையில் சேர்க்க திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வதோதராவில் சி-295 ராணுவ விமானங்களுக்கான புதிய தயாரிப்பு ஆலையை தொடங்கி வைக்க உள்ளனர். இது இந்தியாவின் பாதுகாப்பு விமான உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க படியாகும். ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் உடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இந்த தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இந்த தொழிற்சாலை முதற்கட்டமாக, இந்திய விமானப்படை ஆர்டர் செய்த 56 சி-295 ராணுவ போக்குவரத்து விமானங்களில் 40ஐ தயாரிக்க உள்ளது. இதன் முதல் விமானம் செப்டம்பர் 2026க்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி
இந்தியாவின் மேக் இன் இந்தியா முயற்சியின் ஒரு பகுதியான இந்த தொழிற்சாலை, உள்ளூர் விமாறன உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், கணிசமான எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நேரடி வேலைவாய்ப்பில் 600 பேருக்கும், மறைமுக மற்றும் நடுத்தர திறன் வேலைகள் மூலம் 6,000க்கும் மேற்பட்டோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்திய விமானப்படையில், தற்போது உள்ள மிகவும் பழமையான அவ்ரோ-748க்கு பதிலாக, 2021 செப்டம்பரில், ஏர்பஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.21,935 கோடி ஒப்பந்தத்தில் 56 விமானங்களை கொள்முதல் செய்ய கையெழுத்திட்டது. இந்த 56 விமானங்களில் முதலில் 16 ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், 40 விமானங்கள் உள்நாட்டில் தயாரிக்கபப்டுகின்றன.