கூகுள் பிளே ஸ்டோரிலேயே ஏமாற்று வேலையா? 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்த போலி குரோம் ஆப்! உஷார் மக்களே
செய்தி முன்னோட்டம்
ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பிற்காக செயல்படும் கூகுள் பிளே ஸ்டோரிலேயே போலி கூகுள் குரோம் செயலி ஒன்று உலா வந்து, சுமார் 1,00,000-க்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Hizbartech என்ற புதிய டெவலப்பரால் பதிவேற்றப்பட்ட இந்த செயலி, அசல் கூகுள் குரோம் செயலியின் லோகோ மற்றும் பெயரை அச்சுபிசகாமல் பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றியுள்ளது. பிளே ஸ்டோரின் விளம்பர பிரிவைப் பயன்படுத்தி, அசல் குரோம் செயலியை விட தேடலில் முன்னணியில் தோன்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது.
விளையாட்டு
விளையாட்டு செயலியாக வந்து உருமாறிய தந்திரம்
ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி அறிக்கையின்படி, இந்த செயலி ஆகஸ்ட் 22, 2026 அன்று Ball Bounce என்ற சாதாரண விளையாட்டு செயலியாக பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் செப்டம்பர் 30 அன்று, இதன் பெயரை Google Chrome என்றும், இதன் ஐகானை அசல் குரோம் உலாவியின் ஐகானாகவும் டெவலப்பர் மாற்றியுள்ளார்.
ஆனால், பதிவிறக்கம் செய்து திறந்தால் இது இணைய உலாவியாக செயல்படாமல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்டிங் செயலியாக இயங்கியுள்ளது.
கூகுள் நடவடிக்கை
பாதுகாப்பு அச்சுறுத்தலும் கூகுளின் நடவடிக்கையும்
கூகுளின் அதிகாரப்பூர்வ விளம்பர அமைப்பை பயன்படுத்தியே இந்த செயலி தேடல் முடிவுகளில் மேலே காட்டப்பட்டதால், பெரும்பாலான பயனர்கள் இதை அசல் கூகுள் குரோம் என நம்பி பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ரெடிட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இது குறித்துப் பயனர்கள் புகார் எழுப்பியதைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் இந்த செயலியைப் பிளே ஸ்டோரிலிருந்து உடனடியாக நீக்கியுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரின் செயலி பரிசீலனை முறையையும் மீறி இத்தகைய போலி செயலிகள் நுழைவது பயனர்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
பாதுகாப்பு
போலி செயலிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
டெவலப்பர் பெயரை சரிபார்க்கவும்: அசல் கூகுள் குரோம் செயலியின் அதிகாரப்பூர்வ டெவலப்பர் Google LLC ஆகும். வேறு பெயர்கள் இருந்தால் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
விளம்பர முடிவுகளைக் கவனிக்கவும்: Sponsored எனக் குறிப்பிடப்பட்டுள்ள செயலிகளை நேரடியாகப் பதிவிறக்காமல், டெவலப்பர் விபரங்களை உறுதிப்படுத்தவும்.
விவரங்கள் மற்றும் மதிப்புரைகளைப் படிக்கவும்: செயலியின் விளக்கம், ரேட்டிங் மற்றும் பிற பயனர்களின் விமர்சனங்களை வாசிப்பது நல்லது.
கூகுள் பிளே ப்ரொடெக்ட்: போனில் இந்த அம்சத்தை எப்போதும் இயக்கி வைப்பது கூடுதல் பாதுகாப்பைத் தரும்.