வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஐரோப்பாவின் யூக்ளிட் தொலைநோக்கி
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) யூக்ளிட் தொலைநோக்கி நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், இந்திய நேரப்படி நேற்று (சனி) இரவு 8.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து 42-வது நிமிடத்தில் ஃபால்கன் ராக்கெட்டில் இருந்து பிரிந்திருக்கிறது யூக்ளிட் விண்கலம். இந்த விண்கலமானது அடுத்த ஒரு மாத காலம் பயணம் செய்து, ஜேப்ஸ் வெப் தொலைநோக்கி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இரண்டாவது லெக்ராஞ்சு புள்ளியை (L2) சென்றடையும். பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள இரண்டாம் லெக்ராஞ்சு புள்ளியிலேயே இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியும் நிலைநிறுத்தப்படவிருக்கிறது.
யூக்ளிட் தொலைநோக்கி எதற்கு பயன்படுத்தப்படவிருக்கிறது?
நாம் இருக்கும் இந்தப் பேரண்டத்தை இருண்ட ஆற்றலும் (Dark Energy), இருண்ட பொருளுமே (Dark Matter) 95% ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனால், இவை என்ன என்பது குறித்த புரிதல் நம்மிடம் குறைவாகவே இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாத இந்த இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பொருளைப் பற்றித் தெரிந்து கொள்ளவே இந்த யூக்ளிட் தொலைநோக்கியை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தவிருக்கிறார்கள். இந்த யூக்ளிட் தொலைநோக்கியில் 1.2மீ அகல தொலைநோக்கி, Visible Image Sensor மற்றும் Near Infrared Spectrometer and Photometer ஆகிய மூன்று கருவிகள் இடம்பெற்றிருக்கின்றன. தொலைநோக்கியைத் தவிர்த்து மற்ற இரு கருவிகளைக் கொண்டு, இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பொருளைப் பற்றி மட்டுமல்லாது பிற மண்டலங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தவிருக்கின்றனர்.