Page Loader
புதிய மாற்றங்களைப் பெறும் எக்ஸ், என்ன செய்கிறார் எலான் மஸ்க்?
புதிய மாற்றங்களைப் பெறும் எக்ஸ், என்ன செய்கிறார் எலான் மஸ்க்

புதிய மாற்றங்களைப் பெறும் எக்ஸ், என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 10, 2023
11:30 am

செய்தி முன்னோட்டம்

எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) தளத்தின் வருவாயை உயர்த்தவும், புதிய பயனாளர்களை உள்ளிழுக்கவும் பல்வேறு புதிய மாற்றங்களை அத்தளத்தில் செய்து வருகிறார் எலான் மஸ்க். அதன் ஒரு பகுதியாக சந்தா செலுத்திப் பயன்படுத்தும் வகையிலான எக்ஸ் ப்ரீமியம் சேவையை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினார் அவர். அதன் பிறகு, முன்பு ட்விட்டர் தளத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த பல்வேறு வசதிகளை, எக்ஸ் தளத்தில் சந்தா திட்டத்தின் கீழ் கொண்டு சென்றார் எலான் மஸ்க். எக்ஸின் சந்தா சேவையை கவர்ச்சிகரமானதாக மாற்ற, எக்ஸ் பயனாளர்களும் வருவாயைப் பெறும் விதமாக விளம்பர வருவாய் பகிர்வுத் திட்டத்தை அமல்படுத்தினார் அவர். இவற்றைத் தொடர்ந்து சந்தா பயனாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை எக்ஸ் தளத்தில் அளித்திருக்கிறார் எலான் மஸ்க்.

எக்ஸ்

எக்ஸின் புதிய வசதி: 

அதன்படி, எக்ஸ் ப்ரீமியம் வசதியைக் கொண்டிருக்கும் பயனாளர்கள், இனி தங்களுடைய பதிவுகளில் யார் மறுமொழி இடலாம் என்பதை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சந்தா செய்யாத பயனாளர்கள், தங்களுடைய பதிவுகளில் மறுமொழி இடுவதை சந்தா செய்த எக்ஸ் பயனாளர்களால் தடுக்க முடியும். எக்ஸில் அதிகரித்திருக்கும் ஸ்பேம் பாட்ஸ் பிரச்சினையை எதிர்கொள்ளவே இந்த வசதியை பயனாளர்களுக்கு அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க். ஆனால், பயனாளர்கள் இதனை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். அனைத்து எக்ஸ் பயனாளர்களையும் சந்தா செய்ய வைக்க எலான் மஸ்க் திட்டமிடுவதாக சிலர் கருதும் நிலையில், கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிலர் இந்தப் புதிய வசதியைப் பார்க்கிறார்கள்.

எலான் மஸ்க்

மாற்றம் பெறும் எக்ஸ் ப்ரீமியம் சந்தா சேவை: 

எக்ஸ் ப்ரீமியம் சந்தா சேவையில் தற்போது ஒரே ஒரு சந்தா முறை மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் வலைத்தள பயனாளர்கள் ரூ.650ம், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்கள் ரூ.900ம் செலுத்தி எக்ஸ் ப்ரீமியம் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், விரைவில் மூன்று விதமான சந்தா திட்டங்களை எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அடிப்படையான திட்டத்தில் தற்போது பயனாளர்கள் பார்க்கும் விளம்பர அளவில் எந்த மாற்றமும் இருக்காது, ஸ்டாண்டர்டு திட்டத்தில் தற்போது பார்ப்பதை விட குறைவான விளம்பரங்களை எக்ஸில் பயனாளர்கள் பார்க்க நேரிடும், பிளஸ் திட்டத்தில் விளம்பரங்கள் இன்றி எக்ஸை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியுமாம். விரைவில் இந்த திட்டங்களை எக்ஸில் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

embed

எலான் மஸ்க்கின் எக்ஸ் பதிவு:

This should help a lot with spam bots https://t.co/OYgsYD6QUz— Elon Musk (@elonmusk) October 10, 2023